பாரிய கூட்டணிகளுக்கு முஸ்தீபு ; ரணில் -சஜித்தை சேர்க்கவும் முயற்சி

பாரிய கூட்டணிகளுக்கு முஸ்தீபு ; ரணில் -சஜித்தை சேர்க்கவும் முயற்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொது தேர்தலொன்றை எதிர்கொள்வதற்கான பாரிய கூட்டணி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணி அமையுமென ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொது கூட்டணி உருவாகுமென ஐக்கிய தேசியக் கட்சியும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் புதிய கூட்டணியானது, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான கூட்டணியாக இருக்குமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் சிறுபான்மை கட்சியாக இணையலாமென பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியானது சிறுபான்மை கட்சியாகும். ஏனினில் அதற்கு வாக்கு வங்கி இல்லை. மெகா கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இருப்பாரெனவும் அவரை பொது எதிரணி வேட்பாளெரென அழைக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அரசியல் கூட்டணியை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மே தின கொண்டாட்டத்தை ஜனாதிபதித் தேர்தலுக்கான மைல் கல்லாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி தேர்தலில் ஒன்றாக கரம் கோர்க்கவுள்ளதாகவும் இதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தமது கட்சியின் செயற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன் மஹிந்த ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )