பெரு நாட்டில் ஒரு விடுதலைப் போராட்டம்

பெரு நாட்டில் ஒரு விடுதலைப் போராட்டம்

ஒரு விடுதலைப்போராட்டத்தின் மூளையாகவும் மையக் கருப் பொருளாகவும், இயங்கு சக்தியாகவும் செயற்படுவது அது வகுத்துள்ள மூலோபாயம். அந்த தாரக மந்திரம், அது பாதுகாக்கப்பட்டு சந்ததி வழியாக ஊடு கடத்தப்படுமானால், இலக்கை அடைவதை எந்த வல்லாதிக்க சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது!!
பெரு நாட்டின் ‘ஒளிரும் பாதை’ இயக்கம் பற்றி இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதிகம் தெரியாமலிருக்கலாம். ஒரு காலத்தில் புரட்சியை நோக்கி வெற்றிநடை போட்ட, பெரு கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் ஆயுதமேந்திய வடிவமே ஒளிரும் பாதையாகும். லத்தீன் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது இந்த இயக்கம்.

தலைவர் அபிமால் குஜ்மான் (இயக்கப் பெயர்: கொன்சலோ) தலைமையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தினர். தலைநகர் லீமா, அடுத்தடுத்து இடம்பெற்ற கார் குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது. அதுவே அமெரிக்கா, ஒளிரும் பாதையை ஒரு காலத்தில் உலகின் சக்திவாய்ந்த பயங்கரவாத இயக்கமாக காட்ட காரணமாயிற்று.

என்பதுகளில் அந்த இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஒரு கட்டத்தில், மாவோயிஸ்ட் புரட்சி வென்று, விரைவில் ஆட்சியைப் பிடித்துவிடுவார்களோ என்று சி.ஐ.ஏ. மட்டத்தில் கூட ஐயம் நிலவியது. பெருவின் அன்றைய சர்வாதிகாரி புஜிமோரிக்கு அமெரிக்கா தேவைப்பட்ட உதவிகளை வழங்கி ஒளிரும் பாதையை அழித்தொழிக்க ஆரம்பித்தது. அரச இராணுவ நடவடிக்கையால் மட்டுமல்ல, எதிர்ப்புரட்சிகர சக்திகளுக்கு (சாதாரண விவசாயிகளும் அதற்குள் அடக்கம்) ஆயுதங்கள் வழங்கியும் இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப் பட்டன. ஒளிரும் பாதை போராளிகள், ஆதரவாளர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். இறுதியில் இயக்கத் தலைவர் கோன்சலோ கைது செய்யப்பட்ட பின்னர், அந்த இயக்கத்தின் பலம் பெருமளவில் குறைந்து விட்டது. அதற்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்ற முக்கிய தலைவர்கள் ஒன்றில் கைது செய்யப்பட்டோ அல்லது சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.

தற்போது எஞ்சியிருக்கும் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் (அவரைப் பற்றிய விபரங்கள் குறைவு), அரச கட்டுப்பாடற்ற அமேசன் காட்டுப் பகுதியில் எஞ்சிய போராளிகளை வழிநடாத்தி வருகிறார். கடந்த பத்தாண்டுகளாக ஒளிரும்பாதை, தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் (பெருமளவு வனாந்தரப் பகுதிகள்), தன்னை மீளக் கட்டமைத்து வந்தது. அந்தப்பகுதியில் (கோகெயின் போதைப்பொருளின் மூலப்பொருளான) கொக்கோ பயிர் செய்யப்படுவதாகவும், அதைப்பயிரிடும் விவசாயிகளுக்கும், அதை கடத்தும் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு கொடுத்து, வரி அறவிட்டு வருவதாகவும், அதுவே ஒளிரும் பாதை இயக்கத்தின் பிரதான வருமானம் என்று பேரு அரசாங்கமும், அமெரிக்காவும் கூறி வருகின்றன. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.

உலகெங்கும் “கம்யூனிசம் காலாவதியான சித்தாந்தமாகி விட்டதால்” மக்கள் ஆதரவும் கிட்டாது, அதனால் பெருவில் ஒளிரும் பாதை மாவோயிஸ்டுகளின் கதை முடிந்து விட்டது, என்று தான் பலர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக ஒளிரும் பாதை கெரில்லாக்கள் மீண்டும் இராணுவ இலக்குகளை தாக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் கூட (ஒக்டோபர் 2008), பிரபலமான புரட்சியின் மையமான “ஆயாகுச்சோ” பிரதேசத்திற்கு அருகில், அரச இராணுவத் தொடரணி மீது இடம்பெற்ற அதிரடித் தாக்குதலில், 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

“ஆயகுச்சோ” சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம் என்பது குறிப்பித்தக்கது. பூர்வீக செவ்விந்தியக் குடிகள் வாழும் மலைப்பிரதேசமான ஆயகுச்சோவில் இருந்து தான் ஒளிரும் பாதை இயக்கத்தினர் தமது புரட்சியை ஆரம்பித்தனர். இப்போது கூட அந்தப் பகுதி மக்கள் யாவரும், ஒளிரும் பாதையின் தீவிர ஆதரவாளர்கள். மேலும் பெரு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

‘ஒளிரும் பாதை புரட்சி’ ஆரம்பமாகும் முன்னர் பெருவின் சனத்தொகையில் பத்து வீதமானோர், அந்நாட்டின் என்பது வீதமான நிலங்களை சொந்தமாகக் கொண்டிருந்தனர். சனத்தொகையில் அரைவாசி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்தனர். இன்று ‘ஒளிரும் பாதை அழிக்கப்பட்டு’, ‘கம்யூனிசம் காலாவதியான’ காலத்திலும், நிலைமை இன்னும் மாறவில்லை.

இதற்கிடையே பிரிட்டனின் “சேனல் 4” தொலைக்காட்சி சேவை செய்தியாளர் ஒருவர் பெரு சென்று, பல சிரமங்களுக்கு மத்தியில், ஒளிரும் பாதை இயக்கத்தின் இன்றைய நிலையை படம்பிடித்து அனுப்பியுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, இதுவரை வெளியுலகம் பார்க்காத அரிய படங்களையும், தகவல்களையும் திரட்டித் தருகின்றது. பல மறைக்கப்பட்ட உண்மைகளை இந்த ஆவணப்படம் வெளிக்கொணர்கின்றது.

பூர்வீக மக்கள் மத்தியில் தற்போதும் ஒளிரும் பாதை இயங்கி வருகின்றது. அது மட்டுமல்ல, பெருமளவில் கைது செய்யப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் போராளிகள் கூட, சிறைக்குள்ளே தமது புரட்சிகர அரசியலை தொடர்கின்றனர். சிறைச்சாலையில் வைத்து பூட்டிய போதும், ஒளிரும்பாதை உறுப்பினர்களின் கொள்கைப்பற்றை உடைக்க முடியாத அரச படைகள், சிறைக்கலகத்தை அடக்குவதாக சொல்லி, நூற்றுக்கணக்கான கைதிகளை கொன்று குவித்தனர். இவையெல்லாம் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )