
மே நடுப்பகுதி வரை தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்!
வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்து உள்ளுராட்சி தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டாலும், பின்னர் தேர்தல் குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் மே மாத நடுப்பகுதி வரையில் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
நிதி நெருக்கடி மற்றும் தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தின் ஊடாக தேர்தலை ஒத்தி வைப்பதற்கு சில தரப்பினர் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்களை ஏற்கும் திகதி தொடர்பான அறிவித்தல் ஜனவரி 4 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டது.
இதன்படி நாட்டில் உள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த மற்றைய 340 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையில் முன்னெடுக்கப்பட்டதுடன், கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை 4ஆம் திகதி முதல் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை இடம்பெற்றது.
இதேவேளை கல்முனை நகர சபை தொடர்பான வழக்குத் தாக்கலொன்று காரணமாக அந்த நகர சபைக்கான வேட்புமனுத் தாக்கல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் 339 உள்ளூராட்சி சபைகளுக்கும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான நிலைமையில் அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன. எனினும் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிக்கவில்லை என்று அரசாங்கம் கூறிவந்தாலும், தேர்தலுக்கு எதிராக சில தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்களை செய்துள்ளனர்.
இதேவேளை, தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை கடந்த வியாழக்கிழமை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. “அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு இது பொருந்தாது” என, இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சி முன்வைத்த திருத்தத்தையும் நிராகரித்தே அரசாங்கம் சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.
அத்துடன் தேர்தலுக்கான நிதியை தேடுவது பெரும் சவாலானது என்று திறைசேரி செயலாளர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அதேபோன்று தேர்தல் செலவுகள் அரச நிதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
இந்நிலையில் தேர்தலுக்கான தினத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தாலும், தேர்தல் குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

