இலங்கை-இந்தியா கூட்டு வேலைத்திட்டம்; ஜனாதிபதிரணில்- ஜெய்சங்கர் உடன்பாடு

இலங்கை-இந்தியா கூட்டு வேலைத்திட்டம்; ஜனாதிபதிரணில்- ஜெய்சங்கர் உடன்பாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி வரவேற்பளித்தார்.

மேற்படி உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கொழும்பு, பெஜட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடலில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அதற்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கப்பெற்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் ஆட்சி ஆரம்பிக்கப்பட்ட 1991ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள அதே பொருளாதார நெருக்கடியை இந்தியாவுக்கு சந்திக்க நேரிட்ட போது இந்திய அரசாங்கம் தம்மிடமிருந்த தங்கக் கையிருப்புக்களை அடகு வைத்து அந் நெருக்கடிக்கு தீர்வு கண்டதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர்ந்தார்.

இதனடிப்படையில், இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள நிலைமையை இந்தியா நன்குபுரிந்துகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜெயசங்கர், இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்திய அரசாங்கம் அனைத்துஉதவிகளையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவிகார அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது புதிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டப்பட்டதுடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இணையவழியூடாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உயர் பெறுபேற்றைக் கொண்ட சமூக அபிவிருத்தித் திட்டங்களின் (HICDP- High Impact Community Development Project ) வரையறைகளை நீடிப்பது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமும் இங்கு கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், இலங்கை தரப்பில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும், இந்திய தரப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கைச்சாத்திட்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )