13 ஐ அமுல்படுத்தாத அரசு  சமஷ்டிக்கு எப்படி முன்வரும்; முதலில் 13 ஐ பார்ப்போம் என தமிழ்தேசிய கட்சிகளிடம் தெரிவித்த ஜெய்சங்கர்

13 ஐ அமுல்படுத்தாத அரசு  சமஷ்டிக்கு எப்படி முன்வரும்; முதலில் 13 ஐ பார்ப்போம் என தமிழ்தேசிய கட்சிகளிடம் தெரிவித்த ஜெய்சங்கர்

அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தையே எந்த அரசும் அமுல்படுத்த முன்வராத நிலையில் சமஷ்டி எப்படி சாத்தியமாகுமென கேள்வி எழுப்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவர அரசியல் ஸ்த்திரத்தன்மை,நல்லிணக்கமும் தேவை.நல்லிணக்கம் ஏற்பட இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம்.முதலில் நெருக்கடியிலிருந்து வெளிவர அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதே சாத்தியமானது எனவும் கூறினார்.

இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  வெள்ளிக்கிழமை தமிழ்தேசிய கட்சிகளை கொழும்பிலுள் இந்திய இல்லத்தில் சந்தித்துப் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுமார் அரை  மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,எம்.ஏ.சுமந்திரன்,புளொட் தலைவர்  த.சித்தார்த்தன்,ரெலோ தலைவர்  செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ,தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோர்  பங்கேற்றனர்

இச்சந்திப்பில் அரசாங்கத்துடனான சந்திப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென்ற நம்பிக்கையில்லையெனவும் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க இந்தியா அழுத்தம்கொடுக்க வேண்டுமெனவும் தமிழ் தேசிக்காய் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்   அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார அதிகாரம் பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய மக்கள்

முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம்,இலங்கை  சுதந்திரம் பெற்றதன் பின்னர்  புதிய ஆரம்பத்தை செய்தது போல் 75 வருடத்தின் பின்னரும் புதிதாக ஆரம்பிக்கவேண்டியுள்ள முக்கியமானதொரு கட்டத்தில் இலங்கைக்கு வந்துள்ளீர்கள்.75 வருடங்களின் பின்னர்  புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு அடிப்படையில் மாற்றம்வேண்டுமென்பதே காரணம்.

தெற்கு மக்களும் அடிப்படையில் மாற்றம்செய்ய வேண்டுமென கோரியே  போராட்டம் நடத்தினர்.ஒற்றையாட்சியே இனப்பிரச்சினைக்கு காரணம்.அந்த வகையில் 13ஆவதுதிருத்தமும் ஒற்றையாட்சியாகும்.ஏனவே 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துதால் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை.இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்தியா இலங்கைக்கு உதவியதால் சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.இவ்வாறானநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க சமஷ்டி தீர்வை பெற்றுக் கொடுக்க இந்தியா முன்வர வேண்டுமென வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த   இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 13 ஆவது திருத்தத்தை எந்த அரசாங்கமும் அமுல்படுத்தாத நிலையில் சமஷ்டியை  எவ்வாறு நடைமுறைப்படுத்த முன்வருவர் .இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவர அரசியல் ஸ்த்திரத்தன்மை,நல்லிணக்கமும் தேவை.நல்லிணக்கம் ஏற்பட இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம்.முதலில் நெருக்கடியிலிருந்துவெளிவர அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தைஅமுல்படுத்துவதே சாத்தியமானது என்றார்.

இங்கு  சித்தார்த்தன் கூறுகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், மாகாண சபை தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி தமிழ்தேசிய கட்சிகள் ஏற்கனவே இந்திய பிரதமருக்கு கடிதம்எழுதியுள்ளதாக குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )