
தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டணியும் உடைந்தது; பொதுக்கட்சியின் பெயர், சின்னத்தில் முரண்பாடுகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி வெளியேறிய நிலையில் ஐந்து தமிழ் தேசிய கட்சிகளின் பங்கேற்புடன் புதிய கூட்டணியை அமைக்க முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் கூட்டணியின் பெயர்,சின்னம் தொடர்பில் எழுந்த முரண்பாடுகளினால் முறிவடைந்த நிலையில் இரு கட்சிகள் புதிய கூட்டணியிலிருந்து வெளியேறின.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதில் தனித்து போட்டியிடுவதென்ற முடிவை எடுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சிதமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில் ஏனைய இரு பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகள் வெளியேயுள்ள ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணியாக தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்தன.
இது தொடர்பான பல சுற்று பேச்சுக்களையடுத்து புதிய கூட்டணிக்கு ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் இணங்கிய நிலையில் ஐந்து கட்சிகளின் பங்களிப்புடன் புதிய கூட்டணியொன்றை இறுதி செய்வதற்கான இணக்கப்பாடு வியாழக்கிழமை யாழில் நடைபெற்ற சந்திப்பில் ஏற்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை கட்சித்தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையொன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் விக்னேஸ்வரன் தரப்பில் இணைந்து கொண்ட யாழ்.மாநகரசபையின் முன்னாள் மேயர் மணிவண்ணன் தரப்பினர் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்தும் முகமாக, குறித்த பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, விக்னேஸ்வரன் தரப்பில், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டமைக்கான காரணம் என்னவென்று வினவப்பட்டது.
அத்துடன், வியாழக்கிழமை கூட்டத்தில் ஐந்து கட்சிகளிடையே தான் இறுதி முடிவை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டபோதும், இப்போது திடீரென ஜனநாயகப் போராளிகளை உள்ளீர்த்தமைக்கான காரணம் என்ன? அதற்கான முன்னறிவிப்பு ஏன் செய்யப்படவில்லை என்றும் விக்கினேஸ்வரன் தரப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.
எனினும், அதற்கு உறுதியான பதிலொன்று ஏனைய தரப்பினரால் வழங்கப்ப வில்லை. அதேநேரம், ஜனநாயகப் போராளிகளும் தாம் யாருடன் பேச்சுக்களை முன்னெடுத்து குறித்த கூட்டத்திற்கு பிரசன்னம் ஆகியிருந்தோம் என்றும் கூறவில்லை.அப்போது, அவர்களை தனித்தரப்பாக உள்ளீர்க்க முடியாது என்றும் ஐந்து கட்சிகள் இணைவின் பின்னர், அவர்கள் விண்ணப்பித்தால் அதுபற்றி ஆராய முடியும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்தவிடயமான, தேர்தலில் களமிறங்கும் கட்சி, கூட்டணியின்பெயர், சின்னம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இதன்போது, ‘ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் தேர்தலை முகங்கொடுக்க முடியும் என்று ரெலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சமயத்தில், விக்னேஸ்வரன் தரப்பினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழலாம் என்று சுட்டிக்காட்டினர்.எனினும், தமிழ்த் தேசியக் கட்சியின் தவைவர் சிறீகாந்தா, கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை வாதிட்டார்.
இதனையடுத்து அதற்கு இணக்கப்பாடு கொள்கையளவில் ஏற்பட்டபோதும், அக்கட்சி யாருடையது, அதன் நிருவாகிகள் யார் என்பது பற்றி மணிவண்ணன் தரப்பில் கோரப்பட்டது. அப்போது, அக்கட்சி பற்றிய விபரம் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்சியானது, ஏற்கனவே, சுகு, ஆனந்தசங்கரி, ஆர்.ராகவன் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் பதியப்பட்ட கட்சி . சுகு மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் அதிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் தற்போது ஆர்.ராகவன் அதற்கு செயலாளராக உள்ளார் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து, மணிவண்ணன் தரப்பினர் குறித்த கட்சியில் தம்மால் போட்டியிட முடியாது என்று தெரிவித்துள்ளனர். தமது கொள்கைக்கு அமைவாக புளொட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் அக்கட்சியில் களமிறங்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.தொடர்ந்து, புதிய கூட்டணியின் தலைவராக விக்னேஸ்வரனை நியமிப்பது என்று எடுத்துரைக்கப்பட்டது. அதற்கு ஏகமனதான ஆதரவு வழங்கப்பட்டது.
பின்னர், தேர்தலில் போட்டியிடும் சின்னமாக குத்துவிளக்கை பயன்படுத்த முடியும் என்றும் அதனைப் பொதுச்சின்னமாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விடுதலை இயக்கங்களால் வலியுறுத்தப்பட்டது.
எனினும், விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக விக்னேஸ்வரன் தனது, தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமான மான் சின்னத்தையே பொதுச்சின்னமாக பரிந்துரைத்துள்ளார். அதனை ஏற்க மறுத்த ஏனைய தரப்பினர்கள் ஏற்கனவே விக்னேஸ்வரன் தலைவராக உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னமான மீனைப் பயன்படுத்த முடியும் என்று வாதிட்டனர்.
எனினும், விக்னேஸ்வரன் அதற்கு முதலில் மறுப்பினை வெளியிட்டார். தொடர்ந்து விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களின் பிரதிபலிப்புக்களை அடுத்து, அவ்வாறு செல்வதாக இருந்தால் கூட்டணியின் செயலாளர் பதவியை தன்னிடத்தில் ஒப்படைக்குமாறும், கூட்டணியின் தலைமைத்துவத்தினை சித்தார்த்தன் அல்லது சிறிகாந்தவுக்கு வழங்குமாறும் கோரியுள்ளார்.
அவ்வாறான நிலையில் விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏனை தரப்பினர் ஏற்றுக்கொள்வதில் தொடர்ச்சியாக தயக்கம் காண்பித்தனர். இதனையடுத்து, பிறிதொருகூட்டத்திற்கு செல்ல வேண்டியுள்ளதாக இருப்பதால் வெளியேறுகின்றேன் என்று கூறி கூட்டத்திலிருந்து விக்னேஸ்வரன் வெளியேறியுள்ளார். அவரைத்தொடர்ந்து மணிவண்ணனும் வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து மதியபோசனம் நடைபெற்றது. பின்னர், விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் தரப்பினரை விட்டு எஞ்சிய ஏனைய தரப்புக்களான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன மீண்டும் கூடிப்பேச்சுக்களை முன்னெடுத்தன. அதனடிப்படையில், அந்த தரப்புக்களுக்குள் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. இந்நிலையில், இத்தரப்பினர் இணைந்து புதிய கூட்டணியில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை முகங்கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.

