தேர்தல் நடக்குமா? 18 ல் முக்கிய முடிவு; உயர் நீதிமன்றம் அறிவிக்கும்

தேர்தல் நடக்குமா? 18 ல் முக்கிய முடிவு; உயர் நீதிமன்றம் அறிவிக்கும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர்.விஜேசுந்தரவினால் முன்வைக்கப்பட்ட மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த அறிவித்தலை வழங்கினார்.

இந்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த அடிப்படை உரிமை மனு தொடர்பில் திருத்தப்பட்ட மனுவை முன்வைக்க அனுமதி கோரினார். இதன்படி, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், மனுவை எதிர்வரும் 18 ஆம் திகதி ஆராய்வதற்கு தீர்மானித்துள்ளது.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் வேளையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது எனவும் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது எனவும் இந்தத் தேர்தலை நடத்துவதைத் தடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர்.விஜேசுந்தரவினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜராகப் போவதில்லை என சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )