போர் குற்றத்துக்காக எவரையும் அமெரிக்கா விசாரிக்க முடியும்; சட்ட திருத்தத்தில் ஜனாதிபதி பைடன் கைச்சாத்து காங்கிரசில் இரு கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பு

போர் குற்றத்துக்காக எவரையும் அமெரிக்கா விசாரிக்க முடியும்; சட்ட திருத்தத்தில் ஜனாதிபதி பைடன் கைச்சாத்து காங்கிரசில் இரு கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பாரராளுமன்றத்தின் [காங்கிரஸ் ]இரண்டு கட்சிகளினதும் ஆதரவுடன், ‘போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச் சட்டத்தில் ‘கைச்சாத்திட்டுள்ளார். இதனை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஷாக் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

”ஜனாதிபதி பைடன் “போர்க் குற்றங்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கான நீதி” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். இச்சட்டத்தின் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுமொருவரின் தேசியத்தைப் பொருட்படுத்தாமல் [எந்த நாட்டவர் என்பதை பொருட்படுத்தாமல்]எங்கு செய்யப்பட்ட போர்க் குற்றங்களென்றாலும் அமெரிக்காவில் இருக்கும் ஆட்கள் மீது வழக்குத் தொடர முடியும் . இருகட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், அமெரிக்காவை எமது நட்பு நாடுகள் மற்றும் ஜெனீவா உடன்படிக்கைகளுடன் சிறப்பான முறையில் இணைத்துக் கொள்கிறது.

அத்துடன் உக்ரைனில்இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான ரஷ்யர்கள் அமெரிக்காவிற்கு வந்தால் அவர்களை விசாரிக்கும் திறனை நீதி திணைக்களத்துக்கு ( நீதியமைச்சுக்கு) வழங்குகிறது.”என்று பெத் வான் ஷாக் கூறியுள்ளார் .

குற்றவாளி அல்லது பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டவராக இருந்தாலும் அல்லது குற்றம் எங்கு இடம்பெற்றிருந்தாலும் , குற்றவாளிகளை அமெரிக்க நீதிமன்றங்கள் தண்டிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, சமஷ்டி குற்றவியல் சட்டத்தில் உள்ள போர்க்குற்ற விதிகளை இந்தச் சட்டம் திருத்தியமைக்கிறது.

கடந்த வாரம் வரை, பாதிக்கப்பட்டவர் அல்லது குற்றவாளி அமெரிக்க நாட்டவராகவோ அல்லது அமெரிக்க ஆயுதப்படையில் உறுப்பினராகவோ இருந்தால் மட்டுமே அமெரிக்க நீதிமன்றங்கள் போர்க் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய முடியும். இதனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மீது போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்கர் அல்லாதவர்கள் போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்ட சம்பவங்களும் உள்ளன .

இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வருமாறு மனித உரிமை வழக்கறிஞர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது போர்க் குற்றங்களுக்கான தண்டனை விலக்கீட்டுக்கான இடைவெளியை மூடுகிறது.

ஜெனீவா சாசனத்தின் கடப்பாடுகளுக்கு அமைவாக அமெரிக்கா போர்க் குற்றச் சட்டத்தை கொண்டுவருகிறது. அத்துடன் சித்திரவதை, இனப் படுகொலை, மற்றும் சிறுவர்களை படைக்கு ஆட்சேர்ப்பு செய்தல் போன்ற போர்க் குற்றங்கள் மீதான அமெரிக்க அதிகார வரம்பை சிறப்பான முறையில் சீரமைக்கிறது.

இதேவேளை இந்தத் திருத்தம் போர்க் குற்றங்களுக்கான அமெரிக்காவின் விசாரணைகளுக்கான வாய்ப்புகளை அதிகரித்தாலும், அது போர்க்குற்ற விசாரணைகளில் அதிகளவிலான திருப்பத்தை ஏற்படுத்தாதெனவும் அமெரிக்க நீதிமன்றங்களில் போர்க்குற்ற வழக்கு தொடர வேண்டிய தேவைகளை கோடிட்டுக் காட்டுவதாகவும் அட்டூழியங்கள் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக் கூறலுக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குகின்றதெனவும் ஜஸ்ட் செக்கியூரிட்டியில் அத்லாந்திக் பேரவையின் மூலோபாய வழக்குத் திட்டத்தில் பணிபுரியும் வழக்கறிஞரான எலிஸ் பேக்கர் என்பவர் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )