
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி 10 கோடி ரூபா செலுத்த வேண்டும்
-ஹேமசிறி- 5 கோடி ரூபா,பூஜித-7.5 கோடி ரூபா ,நிலந்த-7.5 கோடி ரூபா, சிசிர – ஒரு கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டும்
-உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்படட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் வெளியாகியிருந்த போதும், தாக்குதலை தடுக்கத் தவறியதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனால் இவர்கள் ஐவரும் தமது தனிப்பட்ட பணத்தில் இருந்து பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட ஐவருக்கும் எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளும் 2022 ஒக்டோபர் 5 ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன. அத்துடன் அனைத்துத் தரப்பினரும் தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை 2022 ஒக்டோபர் 5 ஆம் திகதியிலிருந்து 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில் திகதி அறிவிப்பு இன்றி வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 பேரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டிருந்தனர்.
தாக்குதல் சம்பவத்திற்கு முன்னரே இது தொடர்பான புலனாய்வு தகவல்கள் வெளியாகியிருந்தாகவும், ஆனால் அது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக பதவி வகித்த சிசிர மெண்டிஸ் ஆகியோர் நடவடிக்கை எடுத்து தாக்குதலை தடுப்பதற்கு தவறியுள்ளதாகவும், இதனுடாக இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுத்தருமாறும் தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி காமினி பெரேரா, சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே,சட்டத்தரணி வர்தனி கருணாரத்ன, சட்டத்தரணி லக்ஷான் டயஸ், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன,சட்டத்தரணி தனுக நந்தசிறி, ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில் இந்த 12 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10கோடி ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 7.5 கோடி ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 5 கோடி ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மென்டிஸ் தனது தனிப்பட்ட பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாவும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக அரசாங்கம் ஒரு மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன, பொலிஸ் துறையில் பதவியில் இருப்பதால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாத குழுவொன்றினால் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன் 500 பேர் வரையிலானோர் காயமடைந்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை அது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் மேற்கண்டாவறு தீர்ப்பை அறிவித்தது.

