
யாழ். பல்கலையில் மலையக தியாகிகள் நினைவேந்தல்
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத் தூபியில் நடைபெற்றது.
மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளும் இந்த நினைவேந்தலில் நினைவு கூரப்பட்டதோடு 1930க்கு பிற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க அரசியல் உரிமைப் போராட்டங்களில் பங்கு பற்றி உயிர் நீத்த அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் “மலையக தியாகிகள்” என அடையாளபடுத்துகின்ற நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தில் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையின் பேரில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டு தனது உயிரை தியாகம் செய்த முல்லோயா கோவிந்தனின் உயிர்த்தியாகம் ஜனவரி 10 ஆம் திகதி நடந்தது.
மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த இத்திகதி மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுவதற்கு 2019 டிசம்பர் 15ஆம் திகதி தலவாக்கலை டெவனில் நடைபெற்ற நினைவேந்தலின் போது தீர்மானிக்கப்பட்டது.
இதனை மையப்படுத்தியே இந்த நினைவேந்தல் யாழ். பல்கலையின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியங்களினால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது மலையக வாழ மக்களின் அறப்போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவுருவ படத்திற்க்கு ஈகைசுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

