
தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் உறுதிமொழி உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட முன்னாள் போராளி
தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும் ,தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவமேஜர் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுத்த வந்த சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களின் எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து நேற்று வியாழக்கிழமை கைவிடப்பட்டது.
கடந்த 9-ஆம் திகதி காலை ஆரம்பமான இப் போராட்டம் நேற்று 4ஆம் நாளில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் இடம்பெறும் இடத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள மற்றும் புதிதாக இணையும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், தமிரசுக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோரும் இங்கு வந்திருந்தனர்.
தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளும் தமக்கிடையிலான ஆசன பங்கீட்டு பிரச்சினைகளை கைவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்காக ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை இவர் ஆரம்பித்து முன்னெடுத்துவந்தார்.
இந்த நிலையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமனற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் , ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான கந்தையா சிவநேசன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்த ஒருவர் ஆகியோர் எழுத்துமூல ஆவணத்தில், தாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாக செற்படுவோம், உண்ணாவிரதம் இருப்பவரின் கோரிக்கையை வலுப்படுத்த ஒன்றிணைவோம் என்ற உறுதிமொழியை வழங்கி கையொப்பமிட்ட பின்னர் உண்ணாவிரதம் மேற்கொண்டவருக்கு நீராகாரம் வழங்கி உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த வேலுப்பிள்ளை மாதவமேஜர் உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டிருந்த போதிலும் ஒற்றுமைப்பட உறுதியளிக்கும் ஆவணத்தில் அவர் கையொப்பமிடவில்லை.
அத்தோடு நேற்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் இந்த போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்து இதில் கலந்துகொண்டிருந்தார்.

