பழைய பங்காளிகள் மீண்டும் வந்தால் பலம் தேர்தலின் பின்னர் கூட்டமைப்பு பதியப்படும்

பழைய பங்காளிகள் மீண்டும் வந்தால் பலம் தேர்தலின் பின்னர் கூட்டமைப்பு பதியப்படும்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து முன்னர் வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந்த கூட்டு பலமடைந்துள்ளது. இதனால் தேர்தல் முடிந்தவுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயேஇவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் எப்படி என்பது உங்களுக்கு தெரியும். இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து பயணித்தன. எங்களைப் பொறுத்தமட்டில் நானும், சித்தார்த்தனும் கட்சி ரீதியாக தமிழரசுக் கட்சிக்கு கடிதம் எழுதினோம்.ஏனைய கட்சிகளையும் அரவணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி, அதனூடாக நாங்கள் எல்லோருக்கும் வலுவான ஒற்றுமையாக இருப்பதாக காட்ட முடியும். மக்களது அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். நாங்கள் 6 கட்சிகள் ஐ.நா சபைக்கு கடிதம் எழுதினோம். பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினோம்.

இதன்போது, எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டதன் காரணமாக ஏனைய தேசிய கட்சிகளையும் உள்ளெடுப்பது சம்பந்தமாக சம்பந்த னுடனும் பேசினோம். கடிதமும் எழுதினோம். ஆனால் அந்த கடிதத்திற்கான பதில் வருவதற்கு முன்னர் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுகின்ற முடிவை எடுத்திருந்தார்கள். அந்தவகையில், நாங்கள் வைத்த கோரிக்கைக்கு பதில் தராது இந்த முடிவை எடுத்து வெளியில் செல்லும் நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில் உள்ளே வர வேண்டும் என கருதிய கட்சிகள் எல்லோரும் அணிதிரண்டுள்ளோம். குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் எமது கூட்டில் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சினையை வென்றுறெடுப்பதற்கு நாங்கள் பலமான கூட்டாக ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த கூட்டில் வந்து இணைய வேண்டும் என நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

தேர்தல் தொடர்பில் எங்களது கடிதத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்களது முடிவு கவலையளிக்கிறது. மக்கள் ஒற்றுமையைத் தான் விரும்புகிறார்கள். ஆனால தமிழரசுக்கட்சியின் தங்களது தனித்துவத்தை காட்ட வேண்டும் என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. கூட்டமைபில் இருந்து ஒரு கட்சி விலகிச் சென்றாலும், முன்னர் விலகிச் சென்றவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் மக்கள் எமக்கு ஆதரவு தருவார்கள். கூட்டமைப்பு சிதைவு பட முடியாது. மக்கள் எமது பக்கம் இருப்பார்கள்.

தற்போது தேர்தல் ஒன்று வந்துள்ளது. தேர்தல் தான் எங்களது குறிக்கோள் அல்ல. இந்த தேர்தல் முடிந்த பின் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்டமைப்பை உருவாகின்ற, தொடர்ச்சியான தலைமைத்துவத்தை கொண்டிருக்கின்ற, மக்களது ஆலோசனைகளைப் பெறுகின்ற செயற்பாடுகளை செய்ய இருகின்றோம். தனிப்பட்ட கட்சிகளின் விரும்பு வெறுப்பு இங்கு இருக்காது. இது ஒரு கூட்டு. சுழற்சி முறையில் தலைமைத்துவம் பேணப்படும். நாம் பிளவுபடாமல் மக்களது நம்பிக்கையை வீண்போகாது, மக்களது நலனை முன்னிறுத்தி கட்டுக்கோப்பாக செயற்பட வேண்டும். அதற்கு கூட்டமைப்பு பதிவு செய்யப்படும். பொது சின்னம் தெரிவு செய்யப்படும். தற்போது பொது சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )