அரசு – தமிழ்த் தரப்பு பேச்சு தொடருமா?;  அரசின் பதிலிலேயே அடுத்த கட்டப் பேச்சு இன்று முக்கிய சந்திப்பு; முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார் சுமந்திரன்

அரசு – தமிழ்த் தரப்பு பேச்சு தொடருமா?; அரசின் பதிலிலேயே அடுத்த கட்டப் பேச்சு இன்று முக்கிய சந்திப்பு; முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார் சுமந்திரன்

அரசியல் தீர்வு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அரசுக்கும் – தமிழ்த் தரப்புக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

அரசியல் தீர்வு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அரசுடன் இதுவரை நடைபெற்ற சந்திப்புக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து பேசுவதில் அர்த்தம் இல்லை என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் கண்டிப்பாகத் தெரிவித்தனர்.

அரசியல் தீர்வு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் வரைபொன்றை இன்று ஜனவரி -10 ஆம் திகதிக்கு முன் அரசு தர வேண்டும். அவ்வாறில்லையேல் தொடர்ந்து பேசுவதில் அர்த்தம் இல்லை கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று 10ஆம் திகதி முதல் தொடர்ந்து 13ஆம் திகதி வரை பேச்சுக்கள் தொடருமென ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றயை பேச்சுக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு தொடர்பிலான முன்னேற்றங்களை இன்று அரசு அறிவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக இன்றைய சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப் படுத்துவது குறித்தும் இன்று பேசப்படும். அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விடயத்தை ஏற்கனவே இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அரசை வலியுறுத்துவோம் எனவும் சுமந்திரன் கூறினார்.

அரசியல் கைதிகள் விடுவிப்பு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி விடுவிப்பு மற்றும் அரசியலமைப்பில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்து தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டால் அடுத்த கட்டமாக இறுதித் தீர்வு குறித்துப் பேசுவோம். இறுதி அரசியல் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நாங்கள் வலியுறுத்துவோம் எனவும் சுமந்திரன் கூறினார்.

இந்நிலையில் இன்றைய பேச்சுவார்த்தையில் அரச தரப்பில் ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் விஜேதாசா ராஜபக்ச உள்ளிட்டவர்களுடன் மேலும் சிலரும் பங்கேற்கலாம் எனக் கருதப்படுகிறது.

தமிழ்த் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றவுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )