பெப்ரவரி 4 க்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வென அரசு ஏமாற்ற முயலுமானால் மோசமான விளைவு ஏற்படும்

பெப்ரவரி 4 க்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வென அரசு ஏமாற்ற முயலுமானால் மோசமான விளைவு ஏற்படும்

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடலாம் என்பதில் எமக்கும் நம்பிக்கையில்லாமல்தான் ஜனாதிபதியுடனான பேச்சில் பங்கேற்கின்றோம்.ஆனால் அரசு இந்த கால எல்லைக்குள் தீர்வு காண்பதாக கூறுகின்றது.எனவே இந்த கால எல்லைக்குள் இனப் பிரச்சினைக்காண தீர்வை அரசு வழங்காது எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முயன்றால் தமிழ் மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம்.இதனை நாம் விடுக்கும் எச்சரிக்கையாக அரசு கருத்தில் எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த

சுமந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில்,

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு காண்பதாக குறிப்பிட்டு,சபையில் இருந்த அரசியல் கட்சி தலைவர்களின் இணக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.இந்த கூட்டத்தில் அரசியல் தரப்பினர் முற்போக்கான பல சிறந்த விடயங்களை முன்வைத்தனர்.

பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக் கைதிகள் விடுதலை,காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி,காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வ கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பல விடயங்களை எடுத்துரைத்துள்ளோம்.அரசியல் தீர்வு ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்திற்கு முன்னர் அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியல் தீர்வை கோருகிறோம். அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சமஷ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக கோரி நிற்கிறது.அர்த்தமற்ற அரசியல் தீர்வு அவசியமற்றது.அதனை யாரும் கோரப்போவதுமில்லை .ஏற்கப் போவதுமில்லை.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஆரம்ப காலத்தில் இருந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.ஆனால் அந்த யோசனைகள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை,ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிதாக திட்டங்களை வகுக்க வேண்டிய தேவை கிடையாது.ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை செயற்படுத்துவது பொருத்தமானதாக அமையும்.

பலவருடங்களாக இனப்பிரச்சினைக்கு கிடைக்காத தீர்வு எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்திற்குள் அதாவது ஒரு மாத காலத்திற்குள் கிடைக்குமா எனப் பல்வேறு தரப்பினர் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாமல்தான் நாமும் கலந்துக் கொள்கிறோம், அதனை அரசுக்கும் தெரியப் படுத்தியுள்ளோம். தீர்வுத் திட்ட விவகாரத்தில் கூட்டமைப்பு பங்குகொள்ளவில்லை என்ற பழிச்சொல் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.அதனால் தான் பேச்சில் பங்கேற்கின்றோம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நாம் இதயச்சுத்தியுடன் கலந்துக் கொள்கிறோம்.வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.அந்த கால எல்லைக்குள் தீர்வை பெற்றுக் கொடுக்காவிட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.

அரசியல் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டு பிறகு ஒரு நாடகத்தை அரங்கேற்றி தமிழர்களை ஏமாற்றும் வகையில் சர்வதேசத்தின் கண்களுக்கு மண்ணை தூவினால் அது அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

குறுகிய காலத்திற்குள் அரசியல் தீர்வு வழங்க முடியாது என்பதை அறிந்துக் கொண்டு எமமையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் வகையில் அரசு செயற்பட்டால் தமிழ் மக்களை ஒன்றுத்திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம்.75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்ட அரசாங்கத்திற்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இதனை அரசாங்கம் கருத்திற் கொள்ள வேண்டும். என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )