உறுதிமொழிகளை நிறைவேற்றாது பேச்சை தொடர்வதில் அர்த்தமில்லை

உறுதிமொழிகளை நிறைவேற்றாது பேச்சை தொடர்வதில் அர்த்தமில்லை

-10 -ஆம் திகதி வரை அரசுக்கு தமிழ்த் தரப்பு காலக்கெடு

  • அதற்குப் பின் பேசிப் பயனில்லை எனத் தெரிவிப்பு

-சம்பந்தன் கடும் விசனம்; -சமாளிக்க முயன்ற ஜனாதிபதி ரணில்

அரசியல் தீர்வு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அரசுடன் இதுவரை நடைபெற்ற சந்திப்புக்களில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் உருப்படியான முன்னகர்வுகள் இல்லாமல் தொடர்ந்து பேசுவதில் அர்த்தம் இல்லை என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தீர்வு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் வரைபொன்றை ஜனவரி -10 ஆம் திகதிக்கு முன் அரசு தர வேண்டும். அவ்வாறில்லையேல் தொடர்ந்து பேசுவதில் அர்த்தம் இல்லை என இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அரசுக்கும் – தமிழ்த் தரப்பினருக்கும் இடையில் இதுவரை இடம்பெற்ற சந்திப்புக்கள் தொடர்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலான உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை. காணி விடுவிப்பிலும் எந்த முன்னேறம் இல்லை என நேற்றைய பேச்சின் போது தமிழ்க் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியிடம் விசனத்துடன் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளேன். அதன்போது தீர்வுகள் தொடர்பில் பேசுவோம் எனக் கூறியதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

ஆனால் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் அரசால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பில் 10 ஆம் திகதி வரை எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் தொடர்ந்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு என பேச்சின் பின்னர் கருத்து வெளியிட்ட சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதற்கிடையே 10 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு இணக்கப்பட்டுக்கு வர முடியும் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

அத்துடன், அரசியலமைப்பில் உள்ள விடயங்களை உடனடியாக நிறைவேற்றுதல் மற்றும் இறுதித் தீர்வு தொடர்பில் ஒரு வரைபு மற்றும் காலவரையறை வகுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் தமிழ்க் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு உடனடித் தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடம் உள்ள வரைபை தருமாறு ஜனாதிபதி கோரிய நிலையில் அதனை வழங்க இணங்கியதாக சுமந்திரன் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதியுடனான பேச்சின் போது பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் முன்னேற்றங்கள் இல்லாமை குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடும் தொனியிலேயே விசனம் வெளியிட்டதாக பேச்சில் பங்குபற்றியவர்கள் தெரிவித்தனர். இதன்போது சம்பந்தனை சமாளிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பேச்சு வார்த்தையில் அரச தரப்பில் ஜனாதிபதி, பிரதமர், பிரதமரின் செயலாளர், நீதி அமைச்சர் விஜேதாசா ராஜபக்ச, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )