
இந்திய, அமெரிக்க கூட்டுச் சதியே கோதாவை வீழ்த்தியது
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் (அரகலய) பின்னணியில் சர்வதேச சதி இருந்ததாக, தேசத்தை காக்கும் தேசிய அமைப்பின் தலைவர் வண. எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
‘ஹிரு’ தொலைக்காட்சியில் சலகுண நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இணைந்து கொண்ட அவர், போராட்டத்தை முன்னின்று நடத்துவதில் ‘போர்ன் எகெய்ன்’ (Born Again) என்ற குழு, பிரதான பங்குதாரராக செயற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
போர்ன் எகெய்ன் எனும் மதக் குழு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதுடன், சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டதாக எல்லே குணவன்ச தேரர் குறிப்பிட்டார்.
நாட்டை சீர்குலைக்க சர்வதேச சமூகம் விரும்பியதாகவும், போராட்டம் தொடங்கிய தருணத்திலிருந்து, ‘றோ’ மற்றும் ‘சி.ஐ.ஏ’ புலனாய்வுப் பிரிவுகள் அதற்கு ஒரு பாரிய பங்களிப்பை சேர்த்ததாகவும் அவர் கூறினார். இரு புலனாய்வுப் பிரிவுகளும் ஒன்றாக இணைந்து இயங்கின.
1980 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வந்து, அமெரிக்க கிறித்தவத்தை ஆதரிக்கும் குழுக்களில் ஒன்றே ‘போர்ன் எகெய்ன்’ என்றும், அது நாட்டை சீர்குலைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் தற்போது தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார்.
முழுப் போராட்டத்தையும் நடத்தியதில் கொரிய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் இதில் பங்குண்டு. இந்தப் போராட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத கரமாக செயற்பட்ட போர்ன் எகெய்னின் உறுப்பினர் அவர் என்றும் தேரர் வலியுறுத்தினார்.
சர்வதேச படையெடுப்புகள், போராட்டத்தின் மூலம் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் முயற்சி இடம்பெற்றதாகவும் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார்.

