எமக்கு சபையில் பாதுகாப்பு இல்லை  பெண் எம்.பி.க்கள் போர்க் கொடி!

எமக்கு சபையில் பாதுகாப்பு இல்லை பெண் எம்.பி.க்கள் போர்க் கொடி!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் முன்வைத்த தரக்குறைவான  விமர்சனங்கள் தொடர்பில் அரச தரப்புக்கும் எதிர்கட்சிக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களுக்கு எதிரான வாய் மூல வன்முறைகள் ,துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதால் தமக்கு சபையில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பு பெண் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற தினப்பணிகளைத் தொடர்ந்து  எழுந்த அரச தரப்பு எம்.பி.யான சமன் பிரிய ஹேரத்,இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தொடர்பில் எதிர்கட்சி எம்.பி.யான நளின் பண்டார மிகவும் ஆபாசமாக பேசினார். எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.  இதனையடுத்து எழுந்த அரச தரப்பு எம்.பி. யான கோகிலா குணவர்தனவும் அதே கருத்தை முன்வைத்தார்.

எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., இவர்கள் என்ன பிரிவின் கீழ் இந்த பிரச்சினையை முன்வைக்கின்றார்கள் எனக் கேள்வி எழுப்பியதுடன், இதற்கு அனுமதிக்க வேண்டாம் என சபைக்குத்  தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவிடம் வலியுறுத்தினார்.

எனினும் அரச தரப்பினர் தொடர்ந்தும் நளின் பண்டார எம்.பி.யின் தரக்குறைவான .ஆபாசமான பேச்சுக்கள் தொடர்பில் நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி குரல் கொடுத்தனர். பெண்களுக்கு எதிரான இவ்வாறான வாய் மூல வன்முறைகள் , துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை  எடுக்காது விட்டால் இந்த சபையில் பெண்களான நாம் எப்படி பேச முடியுமெனவும் கேள்வி எழுப்பினர்.

அப்போது மீண்டும் எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., ஆபாசமான வார்த்தை ,ஆபாசமான வார்த்தை என்கின்றீர்களே அது என்ன வார்த்தை என்பதனை தெளிவாக கூறுங்கள் பார்ப்போம் என்றார்.

இதனையடுத்தது எழுந்த இராஜாங்க  அமைச்சரான இந்திக்க அநு ருத்த , அந்த ஆபாச வார்த்தையை கூறுமாறு கிரியெல்ல எம்.பி. கேட்கின்றார். அந்த ஆபாச வார்த்தையை மீண்டும் கேட்பதில் அவருக்கு ஏன் இந்தளவு ஆசை எனக்கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்த்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான சமிந்த விஜேஸ்ரீ , ராஜபக்ஷ  அமைச்சர் டயனா கமகே அன்றைய தினம் அக்கிராசன கட்டளையை மீறினார்.முஜிபுர்  ரஹ்மான் எம்.பி.யை குடு விற்பவர் எனக் கூறினார் என்றார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க  அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் , அரசு தரப்பு எம்.பி.க்களான சீதா அரம்பபொல , கோகிலா குணவர்தன ஆகியோரின் வீடுகள் ஆர்பாட்டக்காரர்களினால் தீ வைக்கப்பட்டன. இந்த பாராளுமன்றத்தில் பெண்கள் பாராளுமன்ற ஒன்றியம் என்று ஒன்றுள்ளது. அதனால் ஏன் இவர்களுக்கு குரல் கொடுக்க முடியவில்லை எனக்கேள்வி எழுப்பினார்.

இதன்போது மீண்டும் எழுந்த கோகிலா குணவர்தன எம்.பி. பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களுக்கு எதிரான வாய் மூல வன்முறைகள் ,துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதால் எ மக்கு சபையில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எமது பாதுகாப்பபு சுதந்திரம்  உறுதிப்படுத்தப்பட வேண்டும். திஸ்ஸ குட்டி ஆரச்சிக்கு நடவடிக்கை எடுத்துபோல் நளின் பண்டார எம்.பி.க்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நளின் பண்டார எம்.பி. ஒரு பெண் எம்.பி.யை மோசமாக  ஆபாசமாக விமர்சிக்கும்போது  அவருக்கு பக்கத்தில் சிரித்தவாறு இருந்த ரோகினி குமாரி இப்போது நாம் பெண்களுக்க குரல் கொடுக்கும்போது  எழுந்து வெளியே சென்றுவிட்டார்.தனக்கு மட்டுமன்றி வேறு பெண்களுக்கும் அநீதி நடக்கும்போது அவர் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

அப்போது மீண்டும் சபைக்குள் வந்த ரோகினி குமாரி விஜேரத்ன எம்.பி. ”பெண்ணான எனக்கு இந்த சபையில் வார்த்தை துஷ்பிரயோகம் நடந்த போது நீங்கள் தான் சபைக்கு தலைமை தாங்கினீர்கள். (பிரதி சபாநாயகர் அஹித் ரஜபக்ஸ  )அப்போது சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இது போன்ற சம்பவம் நடந்திருக்காது. இங்கு சர்ச்சைக்குரிய வார்த்தையாக ”மலக்கழிவு  லொறி ” என்ற வார்த்தை  கூறப்படுகின்றது. ”மலக்கழிவு  லொறி ”  என்ற வார்த்தை ஆண் பாலுமல்ல பெண் பாலுமல்ல .எனவே அந்த வார்த்தை ஒரு பெண்ணை இழிவு படுத்துவதாக எடுத்துக்கொள்ள முடியாது. அத்துடன் ”மலக்கழிவு  லொறி ”கள் எம்முடன் மோதுவதனை நாமும் விரும்பமாட்டோம். ”மலக்கழிவு  லொறி  களைக் கண்டால் நாமும் விலகித்தான்  செல்வோம்” என்றார்.

இந்த தர்க்கத்தை முடிவுக்கு கொண்டுவர சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர்  பலமுறை முயன்றும் முடியவில்லை.இறுதியில் இவ்விடயத்தை நான் சபாநாயகரின் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வேன் என உறுதியளித்து தர்க்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )