
தமிழர்களை கொலை செய்த படைகளைக் கொண்டு சிங்களவர்களை கொல்ல வாசற் கதவை திறந்துவிட்டுள்ள ரணில்
தமிழர்களை கொலை செய்த படைகளை கொண்டு சிங்கள இளைஞர்களை கொலை செய்யும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு படைகளுக்கு வர்த்தமானி ஊடாக ஆணை வழங்கியுள்ளார்..இதன்மூலம் சிங்கள இளைஞர்களை கொலை செய்யும் வாசற் கதவை அவர் திறந்து விட்டுள்ளார்.இதனை சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம். பி.எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றிணையுமாறு பேராசிரியர் சரித ஹேரத் அழைப்பு விடுத்தார்,விடுதலை புலிகள் அமைப்பினர் மது அருந்தும் புகைப்படங்களோ,வெறுக்கத்தக்க வகையிலான புகைப்படங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை,உலகில் ஒழுக்கமான ஒரு இயக்கமாக விடுதலை புலிகள் அமைப்பு காணப்பட்டதையிட்டு பெருமை கொள்ள வேண்டும் என எஸ்.பி.திஸாநாயக்க எம்.பி. குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில் தமிழர்களை கொலை செய்த படைகளை கொண்டு சிங்கள இளைஞர்களை கொலை செய்யும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு படைகளுக்கு வர்த்தமானி ஊடாக ஆணை வழங்கியுள்ளார் இதனை சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்போதையாய் ஜனாதிபதி சித்திரைவதை முகாமை வைத்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது.சிங்கள இளைஞர்களை கொலை செய்யும் வாசற் கதவை ஜனாதிபரி ரணில் விக்கிரமசிங்க தற்போது திறந்து விட்டுள்ளார்.
சமாதானம்,நீதி,அதிகார பகிர்வு ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கினால் இந்த நாடு முன்னேற்றமடையும்,அதனை விடுத்து இராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்ள ஆட்சியாளர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது.
இலங்கை ஆட்சியாளர்கள் இன்றும் சரியான பாதையில் சிந்திக்கவில்லை.அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணாமல் படைகளை வலுப்படுத்தி அதனூடாக தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள்.
விடுதலை புலிகளின் ஒழுக்கம் பற்றி இன்று பெருமிதம் கொள்ளும் சிங்களவர்கள் புலிகள் மீது கரிசனை கொண்டு நீதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் இந்த நாடு பல்துறைகளில் இன்று முன்னேற்றமடைந்திருக்கும்.இனவாதமும்,இராணுவ வாதமும் ஆட்சியாளர்களின் மனங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது இதனை இந்தியா,அமெரிக்கா,பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு கூறிக் கொள்கின்றேன் என்றார்.

