
தேர்தலை பிற்போட முற்பட்டால்; பெரும் புரட்சி வெடிக்கும்
உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் பாரிய புரட்சியொன்று நாட்டுக்குள் ஏற்படும். அவ்வாறானதொரு புரட்சி ஏற்பட்டால் அதில் நாங்களும் பங்கேற்போம் என எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் பிரேத எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யுமான லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி,பிரதமர் அலுவலகம்,பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்த
அவர் மேலும் பேசுகையில்,
தேர்தல் என்பது அரசிற்கு தவறுகளை திருத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகும். இந்தியாவில் பிரதமர் மோடி கொரோனா உச்ச சந்தர்ப்பத்தில் மாநில தேர்தலை நடத்தினார். அதன் விளைவாக 5 மாநிலங்களிலும் பிரதமர் மோடி தோல்வியடைந்தார். பின்னர் தனது தவறை உணர்நது, கொரோனா தொற்றை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஒன்றை நடத்தினார். அதில் அந்த மாநிலங்கள் அனைத்தையும் வெற்றிகொண்டார். அதனால் தேர்தல் மறுசீரமைப்பு நடவடிக்கையை காரணம் காட்டி தேர்தலை பிற்போடக்கூடாது என அரசுக்கு தெரிவிக்கின்றோம். மறுசீரமைப்பு நடவடிக்கை 10வருடங்களாக பிரதமர் தினேஷ் தலைமையில் இடம்பெறுகின்றது. இன்னும் நிறைவடையவில்லை. அதனால் தேர்தலை பிற்போட முயற்சிக்கவேண்டாம் அது தேசிய ரீதியில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
எனவே அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறு செயற்பட்டால் நாட்டில் பாரியதொரு புரட்சி ஏற்படும். அவ்வாறான புரட்சி ஏற்பட்டால் விருப்பம் இல்லாவிட்டாலும் அதில் நாங்களும் பங்கேற்போம்.அத்துடன் பாராளுமன்ற பிரேரணை ஒன்றின் மூலம் தேர்தலை பிற்போட முடியாது. உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுழுவுக்கு உள்ளது என்றார்.

