அரசை வீழ்த்த முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன்; அவசரகாலச் சட்டமும் வருமென ரணில் கடும் எச்சரிக்கை

அரசை வீழ்த்த முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன்; அவசரகாலச் சட்டமும் வருமென ரணில் கடும் எச்சரிக்கை

அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசை வீழ்த்த இடமளிக்க முடியாது,அப்படி யாராவது முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன்,அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி,பிரதமர் அலுவலகம்,பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்த

அவர் மேலும் பேசுகையில்,

பாராளுமன்றம் அமைதியான முறையில் கூடும் சூழல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மே மாதம் 9 ஆம் திகதிமற்றும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி நாட்டில் எவ்வாறான சூழல் காணப்பட்டது என்பதை அனைவரும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஜூலை மாதம் 9 ஆம் திகதி போராட்டத்தில் ஜனாதிபதி விரட்டியடிக்கப்பட்டார்.ஜனாதிபதி மாளிகை நாசமாக்கப் பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் ஆக்கிரமிக்கப்பட்டது, ஜனநாயக்திற்கு எதிராக செயற்பாடுகள் இடம்பெற்றன.அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க முயற்சித்தார்கள்.

பாராளுமன்றத்தை சுற்றிவளைத்திருந்தால் நாடு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும்,போராட்ட சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணிய வேண்டாம்,ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்களே நாட்டில் இடம்பெற்றன.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம்,19 ஆவது திருத்தம் ஆகியவற்றை உருவாக்க முன்னின்று செயற்பட்ட நான் தற்போது சர்வாதிகாரியாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளேன்.மே 9 ஆம் திகதி போராட்டத்தின் பின்னர் போராட்டகாரர்களினால் மகாநாயக்க தேரர்களும்,சர்வ மத தலைவர்களும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டனர் .பௌத்த மத தலைவர்களை அச்சுறுத்துபவர்கள் எவ்வாறு அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதத்தை பாதுகாப்பார்கள்?,ஆகவே ஜனநாயகத்தை மலினப்படுத்தும் வகையில் போராட்டங்கள் இடம்பெற்றன.

போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உண்டு.அனுமதியுடன் போராட்டத்தில் எவரும் ஈடு படலாம்.அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளேன். போராட்டத்தில் ஈடு படுங்கள் ஆனால் வாகன நெரிசலை ஏற்படுத்த வேண்டாம்.

போராட்டத்தில் ஈடுபட்டு அரசை வீழ்த்துவதாக ஒருதரப்பினர் கூறுகின்றனர். போராட்டத்தினால் அரசை வீழ்த்த ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்,அப்படி யாரவது முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன்,அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவேன்.

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் நல்லவராயின் பஷில் ராஜபக்ஸ எவ்வாறு கெட்டவரானார்?போராட்டத்தில் ஈடு பட்டவர்களுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் தற்போது இல்லை.அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

போராட்டத்தின் பின்னணியில் இருந்து செயற்பட்ட ஊடகங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.போராட்டம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றதன் பின்னர் இச்சம்பவம் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவை அமைப்பேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )