
மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுங்கள்
வடக்கு, கிழக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும், அங்குள்ள இராணுவத்தினர் வெளியேறி அந்த இடங்களின் புனிதத்தை பேணுவதற்காக இடமளிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே கஜேந்திரன் எம்.பி இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்த மாதம் தமிழர்களை பொறுத்தவரை முக்கியமான மாதமாக உள்ளது. இந்த தீவின் ஆட்சியதிகாரத்தை பிரித்தானியர்களிடம் இருந்து 1948 ஆம் ஆண்டில் சிங்கள பேரினவாதம் பெற்றுக்கொண்ட பின்னர் தமிழருக்கு எதிரான இனப் படுகொலைகள் திட்டமிட்ட ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. 77, 83 மற்றும் 87 கலவரங்கள் என்று படுகொலைகள் இடம்பெற்ற நிலையில், அதில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்காக தங்களின் இனம் ஆயுதமேந்தி போராடியது. அவ்வாறான ஆயுதப் போராட்டம் 37 ஆண்டுகள் நடந்துள்ளன.
இந்த விடுதலைப் போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தங்களின் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களை நினைவு கூரும் மாதத்தில் நாங்கள் நிற்கின்றோம். இந்நிலையில் எங்களுக்காக உயிர்நீத்த அந்த மாவீரர்களுக்காக ஒருகணம் தலைசாய்த்துக் கொள்கின்றேன்.
இந்த இடத்தில் ஜனாதிபதி இருப்பதால் சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன். நாங்கள், இறந்த உறவுகளை நினைவு கூரும் இவ்வேளையில் அந்த உரிமைகள் மறுக்கப்பட்டு, இராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அவை நடக்கின்றன. மாவீரர் துயிலும் இல்லங்கள் பல இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி புனிதமான இடமாக அவற்றை பேணுவதற்காக இடமளிக்க வேண்டும் என்று கேட்பதுடன், நினைவேந்தலை நடத்த பல்லாயிரக் கணக்கான மக்கள் கூட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
கடந்த வாரம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இந்த சபையில் என்னைப் பற்றி பொய்யொன்றை கூறியுள்ளார். அதனை மறுக்கின்றேன். கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை நடத்தப்பட்டது. காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்தினால் நடமாடும் சேவை நடத்தப்பட்ட நிலையில் காணாமல் போனோரின் உறவினர்கள் அதனை நிராகரித்து எதிர்த்து போராட்டமொன்றை நடத்தினர். நீதி அமைச்சர் வரும் போது உறவுகள் எங்கே என்று கேட்பதற்காக கூடினர். அவர்களுடன் நானும் சென்றிருந்தேன். அந்த இடத்தில் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்திற்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டதே தவிர, இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்காக நடத்தப்பட்ட நடமாடும் சேவையை குழப்பவில்லை.
ஆனால் நீதி அமைச்சர் அது தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயற்படுகின்றார் என்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்க வேண்டும். இதனை விடுத்து பொய்யான தகவல்களை வெளியிடுவதை கண்டிக்கின்றேன் என்றார்.

