
யுத்தமுமில்லை,செலவும் அதிகரிப்பு 3 இலட்சம் இராணுவம் நாட்டுக்கு அவசியமா?
நாட்டில் யுத்தமில்லாத நேரத்தில் செலவுகளை ஏற்படுத்தும் வகையில் 3 இலட்சம் இராணுவம் அவசியமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவித்த பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான வேலைத்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய சபையின் உப குழுவினது தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இது தொடர்பாக ஆராயுமாறு தேசிய சபைக்கு யோசனை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த உபகுழுவின் ஆரம்பகட்ட அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பாதுகாப்பு தரப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றன. யுத்தம் இல்லாத நேரத்திலேயே இவ்வாறு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகின்றது. செலவுகளை அதிகரிக்கும் வகையில் இந்த நேரத்தில் 3 இலட்சம் இராணுவத்தினர் அவசியமா? என்ற கேள்விகளும் எழுகின்றன. இதனால் இந்த விடயம் தொடர்பில் நாங்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளோம்.
அந்த யோசனையில் இராணுவ உறுப்பினர்களை நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்ற விடயங்களை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம் என்றார்.

