
கஞ்சா விற்று டொலர் சம்பாதிக்கும் அரசு
டிலக்ஸி
மணித்தியாலத்திற்கு32 இலங்கை பிரஜைகள் வெளிநாடு செல்வதாகவும் கடந்த 8 மாதங்களில் 500வைத்தியர்கள்,பொறியியலாளர்கள் மற்றும் பெருந்தொகையான புத்திஜீவிகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.எந்தவொரு நாட்டிலும் குடிமக்கள் இரண்டு காரணங்களுக்காக வெளிநாடு செல்கிறார்கள். முதலாவது அவர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வது. இரண்டாவது,அவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வோர் பற்றி தாய் நாடு பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. புலம்பெயர்ந்தவர் எப்பொழுதும் வெளிநாட்டில் வேலை செய்து தனது குடும்பத்தை அங்கேயே வைத்துக் கொண்டு சம்பாதித்த பணத்தை அந்நாட்டிலேயே செலவு செய்கிறார். ஆனால் வெளிநாட்டிற்கு வேலைக்காகச் செல்லும் மனிதர் பயனுள்ளவர். அந்த நாட்டில் வேலை செய்து சம்பாதித்த பணத்தை இந்த நாட்டுக்கு அனுப்புகிறார். இந்த பணம் அந்நிய செலாவணி என்று அழைக்கப்படுகிறது.
தற்போது, இந்நாட்டின் பொருளாதாரத்தில் மூன்று முக்கிய அந்நியச் செலாவணி ஈட்டும் துறைகள் உள்ளன. முதலாவது வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம்.இலங்கைக்கு அந்நியச் செலாவணியைக் கொண்டு வரும் இரண்டாவது குழு ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்.அடுத்ததாக,சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களும் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறார்கள். இதற்குச் சில காலங்களுக்கு முன்னர் இந்நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த முக்கியக் குழுவானது தேயிலை,தேங்காய்,இறப்பர் போன்றவற்றை நாட்டிற்கு ஏற்றுமதி செய்த தோட்டத் தொழிலாளர்கள்.
மேலும், சிறிய ஏற்றுமதி பயிர்கள் அல்லது
வாசனை திரவியங்களை வெளிநாட்டுக்கு அனுப்பியவர்களும், ரத்தினங்களை அந்நிய நாட்டிற்கு அனுப்பியவர்களும் கணிசமான அளவு அந்நிய செலாவணியை இந்நாட்டிற்கு சேர்த்தனர். இங்கு,ரத்தினங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது ஒருவித கேள்விக்குரிய வணிகமாக விவரிக்கப்படலாம். பெரும்பாலான ரத்தினங்கள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. சில சமயங்களில் ரத்தினங்களை விழுங்கி வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். இவை பல்வேறு வழிகளில் மறைத்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் சீர்திருத்தம் மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதற்கும் தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கும் அரசாங்கம் சட்டத்தை கையில் எடுத்துள்ளது. வாக்களித்த மக்கள் தம் உரிமைகளை பெற்றுக்கொள்ள கடுமையாக போராடுகின்றனர். நாட்டில் இந்த பொருளாதாரத்துக்கு காரணமான அரசியல் தலைவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவும் இல்லை அவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை. அப்பாவி ஜனங்கள் தினம் தோறும் தம்முடைய உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக போராடி போராடி சிறைவாசம் செல்கின்றனர். ஜனநாயகம் நிறைந்த நாடு என்று கூறி மக்களை பாதாளத்தில் தள்ளி வேடிக்கை பார்க்கிறது இலங்கை அரசாங்கம். அழகிய எழில் கொஞ்சும் இலங்கை இன்று கண்ணீரோடு வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் அமைதியாக தங்களுடைய சுயநலங்களுக்காக தங்களுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அன்றாடம் கூலிக்கு மாரடிக்கும் கூலி தொழிலாளி தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் பசிக்கு உணவு இன்றி தினம் தினம் கண்ணீர் வடிக்கிறான்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், உணவு, மருந்து, அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் பலர் பரிதவித்து வருகின்றனர். இலங்கையின் இன்றைய சூழ்நிலையின் அடிப்படையில், வாரத்திற்கு நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு மட்டும் உணவுக்கான விலை அவர்களுடைய வருமானத்தை விட அதிகமாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 29.8 ஆக இருந்த பணவீக்கம் 39.1 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளித்துக் கொள்ள முடியாத நம் அடுத்த தலைமுறையினர் நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத அரசாங்கம் அவர்களை கைது செய்து வேடிக்கை பார்க்கின்றது.
திருட்டு அரசியல்வாதிகளை கைது செய்ய முடியாத ஆட்சியாளர்கள் கஞ்சாவை உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஆலோசித்து வருகின்றனர். இது நாட்டிற்கு டொலர் கொண்டு வரும் ஒரு அறிகுறியாக தெரியவில்லை. எதிர்கால தலைமுறையை போதைக்கு அடிமையாக்கி அவர்களை சூறையாடும் படலம் என்று தான் கருத வேண்டும். இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் உள்ள அஃப்ளாடோக்சின் என்ற நச்சுப்பொருள் தரத்தை விட உயர்வானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதெல்லாம் அடித்தட்டு மக்களை ஒழித்திட அரசாங்கம் தீட்டியுள்ள திட்டம் தான்.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கையின் வருடாந்த பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 70% ஆக உயர்ந்துள்ளது. உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தரவுகளும் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டை விட 84.6% அதிகரித்துள்ளது. 22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கை, இந்த ஆண்டு வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறையை எதிர்கொண்டதால், நிதி மற்றும் அரசியல் குழப்பத்தில் மூழ்கியுள்ளது. எரிபொருள், உரம், மருந்துகள் உள்ளிட்ட முக்கிய இறக்குமதிகளும் இலங்கைக்கு கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இலங்கையில் பல வருட நிதி நிர்வாகச் சீர்கேட்டும் தான் இந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு முக்கிய காரணம்.
தற்போதைய நெருக்கடிக்கு நிர்வாக அமைப்பின் தோல்வியே காரணம். இந்தக் குரல், ஏற்கனவே உள்ள சிஸ்டத்தை முழுமையாகத் திருத்த அல்லது சீர்திருத்த ஒரு முறையைத் தேட வழிவகுத்தது. அதற்கு முன் தற்போதைய நெருக்கடிக்கான காரணத்தை ஆராய்வது புத்திசாலித்தனம். இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவை. முதலாவது, ஒழுக்கமான நிர்வாகத்தை ஊக்குவிக்கும் அரசியலமைப்பு நியமங்கள் மற்றும் வழிகாட்டல்களை அபிவிருத்தி செய்வதில் முழு பாராளுமன்றத்தையும் ஈடுபடுத்துவது மற்றும் இரண்டாவது பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு நிலையான பொருட்களை வழங்குவதன் மூலம் இலங்கை மக்கள் இன்று அனுபவிக்கும் இன்னல்களை தாங்குவதைத் தடுப்பதாகும்.

