போதையால் அழிக்கப்படும் தமிழினம்

போதையால் அழிக்கப்படும் தமிழினம்

தமிழர்களின் இருப்பையும் இறைமையையும் அழித்து, தமிழினத்தை கருவறுக்கும் திட்டத்தை சிங்கள அரசு கச்சிதமாகச் செய்து வருகின்றது. அதன் ஒரு வெளிப்பாடான நிலப்பறிப்பும், அதன் பின்னணியில் இனப்பரம்பலின் ஊடாக தமிழர் பூர்வீக நிலத்தை அபகரிப்பதுமான செயல் ஒவ்வொரு நாளும் அரங்கேறுகின்றது. இதனால், அதை எதிர்த்துப் போராடுவது, எதிர்ப்புக் குரல் எழுப்புவது என்பது தமிழ் மக்களின் நாளாந்த கடமையாகிவிட்டது. தமிழர்களின் கவனத்தை அங்கே திருப்பிவிட்டு, இனத்தைக் கருவறுக்கும் ஒரு பாரிய திட்டம் அரசினாலும், அதன் உயர்மட்டத்தில் இருப்பவர்களினாலும் திட்டமிட்ட முறையில் நடத்தப்படுவதை நம்மில் பலபேர் இன்னமும் உணர்ந்துகொள்ளவில்லை. அதுதான் போதைப்பொருள் விநியோகம்.

வடக்கு, கிழக்கு, மலையகம் என்று தமிழ் மக்களின் பூமியெங்கும் போதைப்பொருள் பாவனை கட்டுக்கடங்காமல் பெருகிச் செல்கிறது. ஹெரோயின், ஐஸ், மாவா என்று பல வடிவங்களில் தமிழர் பிரதேசங்களுக்குள் கொண்டு வரப்படும் இந்த போதைப் பொருட்கள் எங்கள் இளைய சமுதாயத்தைக் கருவறுக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்கின்றன.

இதனால், உயிரிழப்புகள், கலாசார சீர்கேடுகள், ஏற்கனவே பாரிய இனவழிப்பிற்குள்ளான எங்கள் சனத்தொகை பாரியளவில் வீழ்ச்சியடைவது, கல்விச் சிதைவினால் படித்த, பண்பட்ட சமுகம் இல்லாமற் போதல் (மாணவர்கள் இல்லாமல் ஏற்கனவே பல பாடசாலைகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன), சிந்திக்கவியலாத நிலையில் எப்போதும் ஒரு மனக்குழப்பத்திலேயே இருப்பதால் சரி தவறு எதையும் பகுத்தறிய முடியாமல் அடிமைகளாகவே வாழ்வது என்று எமது இனமே அடியோடு அழிக்கப்படுகிறது. அண்மைக்காலத்தில் மட்டும் யாழில் 10 இற்கும் மேற்பட்ட ஹெரோயின் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 320 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யாழில் மட்டும் 20 இற்கு மேற்பட்ட கிராமங்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானோர் வாழும் கிராமங்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளன.

தொடர்ந்து ஹெரோயின் ஊசியை ஏற்ற முடியாத நிலை எழும்போது போதைக்கு அடிமையானவர்கள் வேறொரு உத்தியைக் கையாள்வதாக கிளிநொச்சி மாவட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கு ஏதோவொரு நோய் பீடித்துள்ளதான சாட்டுடன் அவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். கனுலா (cannula) என்ற சேலைன் ஏற்றுவதற்கேற்ற ஊசியை வைத்தியர் வருவதற்கு முன், நோயாளிகளுக்கு ஏற்றி தாதியர் தயாராக இருக்கும் வழமையை தமக்கு சாதகமாக்கி, கனூலா ஏற்றியதும் மாயமாகி விடுகின்றனராம். இந்த கனூலா ஊடாக ஹெரோயினை அவர்கள் ஏற்றிக் கொள்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலும் கிடைத்துள்ளது.

18 – 23 இடைப்பட்டுள்ள வயதினரே போதைப்பழக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் சொன்னாலும், மிகவும் இள வயதினர்கூட திட்டமிட்டு உள்வாங்கப்படுவதை களத்தில் பார்க்க முடிகிறது. போதைப்பொருள் விநியோகத்தில் மாணவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர். குறிப்பாக பெற்றோரை இழந்த பிள்ளைகள், பெற்றோர் கவனிக்கத் தவறிய பிள்ளைகள், வெளிநாடுகளில் பெற்றோர் வதியும் பிள்ளைகள் என்று பலவீனமான நிலையிலிருக்கும் பிள்ளைகள் இதற்கெனக் குறிவைக்கப் படுகின்றனர். பல்கலைக்கழகங்கள், பிரபல பாடசாலைகளின் வெளியேயும் ஏன், உள்ளேயும் கூட போதைப்பொருள் விநியோகம் வணிகம் நடைபெறுவதை பலர் சுட்டிக் காட்டியும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதது ஏன்? அப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது கூட சிறிய தண்டனையுடன் அவர்களை விட்டுவிடுவதன் காரணம் என்ன?

சிறிய தீவாக இருக்கும் இலங்கையினுள் யார் கண்ணிலும் படாமல் எப்படி போதைப்பொருள் உட்புக முடியும்? அரச உயர்மட்ட ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். 2019 இல் நடந்த சனாதிபதி தேர்தற் பிரசாரத்தில் போதைப்பொருளை ஒழித்துக்கட்டுவதற்கு முன்னுரிமை அளிப்பேன் என்று கூறியதையும், அதற்கு முன்னர் மகிந்த சனாதிபதியாக இருந்தபோது போதைவஸ்துக்கள் அவரது அமைச்சரவை வாகனங்களில் கடத்தப்பட்டது பதிவாகியிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் கூட்டிக் கழித்துப் பாருங்கள்.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு விட்டன, இனி யாரும் அந்த எண்ணத்துடன் வடக்கு கிழக்கில் நடமாட முடியாது என்று கண்காணிக்கும் அரச காவற்துறையையும் இராணுவத்தையும் கடந்து போதைப்பொருட்கள் உள்நுளைய முடியுமென்றால், அது அவர்கள் வாகனங்களில்தான் வந்திருக்க முடியும். அரச அதிகார பீடத்திற்கும் போதை வணிக மையத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வடக்கு கிழக்கில் பல கடற் படை அதிகாரிகள் போதைப்பொருள் விநியோகத்தருடன் பங்காளிகளாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் போதை வாணிபத்தில் ஈடுபட்டிருப்பது பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டும் இன்றுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை. பெண் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் இன்னும் போதைப்பொருள் பாவனையாளர்களாக உள்ளனர். போதைவணிகத்தில் ஈடுபடுவோரை அம்பலப்படுத்த முயன்ற பத்திரிகையாளர் பலர் அச்சுறுத்தப் பட்டிருக்கின்றனர். காவலர் சிலருக்கு இடமாற்றத்துடன் கூடிய அச்சுறுத்தல் விடப்பட்டிருக்கிறது.

வடக்கில் அருண் சித்தார்த், கிழக்கில் பிள்ளையானின் கையாளான இனியபாரதி போன்ற போதைப்பொருள் விற்பனையாளரை இராணுவ உதவியுடன் மக்கள் பிரதிநிதியாகக் காட்ட அரசு பிரயத்தனப்படுகிறது. அதிலும் 164 கிலோ போதைப்பொருளுடன், அரச VIP வாகனத்தில், மன்னாரில் இருந்து அம்பாறை திருக்கோவிலுக்கு போதைப்பொருளைக் கடத்திய போது கையும் களவுமாக மாட்டியவன் இனியபாரதி. இன்று சுதந்திரமாக நடமாடுகிறான். இவர்கள் அனைவரும் மகிந்த குடும்ப சேவகர்கள். ரணிலும் மகிந்த குடும்பத்து சேவகன்தான் என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது. இதனால், சட்டம் ஒழுங்கிற்கூடாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தை மறந்துவிடுங்கள்.

பெற்றோர், ஊர்மக்கள், ஊர்ப் பொதுக்குழுக்கள், ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், என்று அனைவருமே ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் இது. எப்போதும் விழிப்புடன் இருந்து இளைய சமுதாயத்தை கட்டிக் காக்க வேண்டிய காலம் இது. நடைபெற்ற போராட்டம் என்பது வெறுமனே மண்ணை மட்டும் மீட்கும் போராட்டமல்ல என்பதை இப்போது காலம்கடந்து பலர் உணர்ந்திருக்கிறார்கள். கட்டுப்பாட்டுடன் இருந்த காலத்தில் தவறுகள் தேடி அழிக்கப்பட்டன. எங்கள் நிலம் மட்டுமல்லாமல் முழு இலங்கையும் அந்நியர் அத்துமீறலுக்குட்படாமல் பாதுகாக்கப்பட்டது தெரிந்ததே. பிள்ளைகளுக்கு நல்ல விடயங்களை திரும்பத்திரும்பச் சொல்லி வளருங்கள். அவர்கள் செயற்பாடுகளைக் கண்காணியுங்கள். ஆடம்பரமாக, கட்டுப்பாடின்றி பிள்ளைகளை விடுவதால் எழும் பிரச்சனைகளைப் பெற்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எங்கள் சமுதாயத்தின் எதிர்காலம் எங்கள் கரங்களில் மட்டுமே உள்ளது.

    -பாரி
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )