இரட்டை குடியுரிமை விவகாரம் ; கன்னத்தில் அறைந்த ரிஷி சுனக்கின் நியமனம்

இரட்டை குடியுரிமை விவகாரம் ; கன்னத்தில் அறைந்த ரிஷி சுனக்கின் நியமனம்

இலங்கையில் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு பாராளுமன்றம் வர முடியாது என்று அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டவர்களுக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற விடயம் கன்னத்தில் அறைந்ததை போன்று இருக்கும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியானர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த உலகம் கட்டம் கட்டமாகவே நாகரிகத்தை நோக்கி வந்தது. முதலில் கற்கால மனித யுகத்தில் இருந்து மனிதனிடையே குலங்கள் உருவாகின. இதனை தொடர்ந்து ஒரு குலத்தில் இருந்து இன்னுமொரு குலத்துடன் மோதல்களை ஏற்படுத்தி தங்களின் குலத்தை கொண்டு செல்லவே முயற்சித்தனர். பின்னர் இப்போது நாங்கள் உலகளாவிய கிராமம் என்பதற்குள் வந்துள்ளோம். உலகமே இப்போது இப்படி இருக்கையில் எமது நாட்டை சிலர் குல பேதம் நோக்கி கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து வெள்ளையர்களின் கிறிஸ்தவ நாடாகும். அங்கு பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்போது அங்கு அவர் என்ன மதம், இனம் என்று பார்க்கவில்லை. அவர் திறமையானவரா? அவரிடம் இருப்பதை பெற்றுக்கொள்ள முடியுமா? என்றே பார்த்தனர்.

ஆனால் எங்களின் நாட்டில் வேறு நாட்டு குடியுரிமையை கொண்டிருந்தால் அவர் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்று அவரை விரட்டிவிட்டு நாடு தொடர்பில் எந்தவொரு தீர்மானங்களையும் எடுப்பதற்கும் இடமளிக்காது துரத்துகின்றனர். இதனால் இங்கிலாந்து பிரதமர் நியமனம் இலங்கையில் இவ்வாறாக திருத்தத்தை கொண்டு வந்தவர்களுக்கு கன்னத்தில் அறைந்ததை போன்றே இருக்கும்.

உலகில் அமெரிக்கா, பிரிட்டன், கனாடா, ஜெர்மனி போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றம் வருவதற்கோ, அரச தலைவராவதற்கோ எந்த தடைகளும் கிடையாது. ஆனால் நாங்கள் நாடென்ற ரீதியில் பின்னோக்கி குல பேதத்தை நோக்கி போவதால் நான் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை நாங்கள் கட்சியென்ற வகையில் இந்த நேரத்தில் எந்தவொரு தேர்தலுக்கும் தயாராகவே இருக்கின்றோம். அந்தத் தேர்தல் முறையாக நடக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் நாட்டு நிலைமை மற்றும் வேறு காரணங்களால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கும் குழப்பமடைய மாட்டோம். நாங்கள் தேர்தலுக்கு உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )