
புலம்பெயர் தமிழரைப் பாதிக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை நீக்கம்
தமிழ் தேசம் எனப் பேசுகின்ற போது தாயகத்தில் இருக்கிற சனத்தொகையுடன், புலம்பெயர் தமிழ் மக்களும் அதன் ஒரு அங்கம்.அவர்களை பாதிக்கும் இரட்டை பிரஜாவுரிமை நீக்க தீர்மானத்தை நாம் ஏன் ஏற்க வேண்டும்? ஆகவே 22 ஆவது திருத்தச் சட்டம் என்பது ஆட்சியில் உள்ள கள்ளக் கூட்டம் தம்மை ஜனநாயகவாதிகள் எனக் காட்ட எடுத்த ஒரு நாடகம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும்,யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
எதிர் தரப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு திருத்தம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னணியில் தான் அரசாங்கம் அவசர அவசரமாக அது நடைபெறுவதற்கு முதல், ஆரம்ப கட்டமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை 19 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியது.
அந்த பின்னணியில் 22 ஆவது திருத்தம் என்ற பெயரில் 21 ஆவது திருத்தமாக நிறைவேற்றப்பட்ட திருத்தமானது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. குறித்த விவாதத்தில், இந்த திருத்தத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகிய நாங்கள் எங்களுடைய ஆதரவை தரமுடியாது என பகிரங்கமாக தெரிவித்து வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்திருந்தோம்.
நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை கொண்டு வருவதாக சுட்டிக்காட்டித் தான் இந்த திருத்தத்தை கொண்டு வர முயற்சித்தார்கள்.திருத்தம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதன் பின் எடுத்துப் பார்த்தால் ஜனாதிபதியினுடைய ஒரு அதிகாரத்தையும் அவர்கள் குறைக்கவில்லை.
அது தவிர, இரட்டை பிரஜாவுரிமையை நீக்குவதாக சொன்னார்கள். இரட்டை பிரஜாவுரிமை உடையவர்கள் நாட்டில் முக்கியமான பதவிகளுக்கு வருவதை தடுத்திருக்கிறோம் என அவர்கள் சொன்னார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை, எங்கள் மக்களை திட்டமிட்ட வகையில் இனவழிப்பு செய்து, எமது மக்களை விரட்டியும் தள்ளியுள்ளீர்கள். தமிழ் தேசத்தின் அரைவாசி சனத்தெகை மேற்கு நாடுகளிலும், வெளிநாடுகளிலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரும்பிப் போகவில்லை. எமது தேசத்தின் மூளையே புலம்பெயர்ந்து இருக்கிற நிலையில் அவர்களது பங்களிப்பு எங்களுக்கு அத்தியாவசியம் . இங்கிருந்து தப்பிபோன மக்கள் அந்த அந்த நாடுகளில் மிகத் திறைமையாக தங்களது தொழில் ரீதியாக வளர்ந்திருக்கும் நிலையில் எங்களது தேசத்தை கட்டியெழுப்ப அவர்களை வரவேற்க வேண்டும். அவர்கள் எங்களது தேசத்தவர்கள். அவர்கள் வெளிநாடுகளில் வாழ்வதற்காக எங்களது தேசத்துடன் சம்மந்தம் இல்லை என சொல்ல முடியாது.
தமிழ் தேசம் எனப் பேசுகின்ற போது தாயகத்தில் இருக்கிற சனத்தொகையுடன், புலம்பெயர் தமிழ் மக்களும் அதன் ஒரு அங்கம். நீங்கள் செய்த அநியாயத்தால், நீங்கள் கொள்ளையடிக்க கள்ளரை நியமித்தால் நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எங்கள் தேசம் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? ஆகவே, இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான தீர்மானம் எங்களது புலம்பெயர் உறவுகளை பாதிக்கும். அதனை நாம் ஏன் ஏற்க வேண்டும்?
எங்களைப் பொறுத்தவரை இந்த திருத்தம் என்பது முழுக்க முழுக்க போலி காரணத்தை காட்டி எந்த வித அங்கீகாரமும் இல்லாது, ஆட்சியில் உள்ள கள்ளக் கூட்டம் நிறைவேற்றியுள்ளது. ஒரு ஆசனத்தை பெற முடியாத, வெல்ல முடியாத ஒரு கட்சியின் நியமன உறுப்பினர் இன்று ஜனாதிபதியாக வந்து மூன்றில் பெரும்பான்மையுடன் மக்கள் விரட்டியடிக்க இருந்த கள்ளக் கூட்டத்தால் நியமிக்கப்பட்டு, ஆட்சியை பிடித்தவருக்கு ஜனநாயக வாதிகள் எனக் காட்டிக் கொள்ள எடுத்த நாடகமே தவிர ஜனநாயகத்தை நோக்கி பயணிக்க ஆரம்ப புள்ளி கூட இதில் இல்லை. அதை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு போவதற்கு பதிலாக, சிங்கள தலைவர்கள் மீண்டும் அவர்களை ஏமாற்றிய நிலையில், தமிழ் தலைவர்கள் உங்களை ஏமாற்றவில்லை. அந்த உண்மையை நாம் பதிவு செய்துள்ளோம். சரித்திர ரீதியாக சிங்கள மக்கள் திரும்பி பார்க்கும் போது நேர்மையாக இருந்த இரண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் என்பதை காலம் காட்டும் என்றார்.

