மர்மத் தீவான பருத்தித்தீவு அங்கு நடப்பவை என்ன?

மர்மத் தீவான பருத்தித்தீவு அங்கு நடப்பவை என்ன?

யாழ்.பருத்தித்தீவுக் கடற்பரப்பில் என்ன நடக்கிறது? என்பதை கடற்றொழிலாளர் சங்கங்களாலேயே அறிய முடியாதுள்ளது. அனைத்தும் மர்மமாக உள்ளது என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களில் சீன இராணுவத்தினர் சிவில் உடையில் நடமாடுவதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கடற்றொழில் அமைப்பினருடன் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலாளரிடம் தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பருத்தித் தீவில் கடல் அட்டைப் பண்ணைக்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பருத்தித்தீவில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பண்ணை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது யாருடைய பண்ணை? பிரதேச செயலகம் அனுமதி வழங்கவில்லை என்றால் யார் இதற்கு அனுமதி வழங்கினார்கள்? அங்கு நிற்பவர்கள் யார்? என்பது கூட எமக்குத் தெரியாது எனவும் அன்னராசா குறிப்பிட்டார்.

யாழ். குடா கடல் இயற்கையாகவே இறால், கடல் அட்டை மற்றும் மீன் இனங்கள் இனப்பெருக்கம் இடம் பெறும் பகுதியாக உள்ளது. இங்கு செயற்கை அட்டைப் பண்ணை அமைப்பதன் நோக்கம் என்ன?

யாழ்.குடாவில் 50 வருடங்களுக்கு முன்பே கடலில் இயற்கையாக வளருகின்ற அட்டைகளை பிடித்து முதலாளிகள் ஆனவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் அட்டைகளை பிடித்து ஏற்றுமதி செய்தார்கள்.

ஆனால் இன்று புதிதாக அட்டை வளர்ப்பை ஊக்குவிக்கிறோம் எனக் கூறிக்கொண்டு, விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் இன்றி நெக்டா நிறுவனம் கடலை மாசுபடுத்தி வருகிறது.

அத்துடன், இந்திய முதலீட்டாளர்களை அழைத்து அட்டை பண்ணைகள் வழங்கப் போவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்தது. இந்தியாவில் கடல் மாசுபடும் என்பதற்காக இந்திய அரசே அட்டப்பண்ணையை நிறுத்தியுள்ள நிலையில் இங்கு முதலீடு செய்வதற்கு இந்தியர்களை அனுமதிக்க முடியாது.

எமது கடல் எமக்குச் சொந்தம். இந்தியாவாக இருந்தாலும் சீனாவாக இருந்தாலும் கடல் அட்டை என்ற போர்வையில் எமது வளமான பகுதிகளை அபகரிக்க முடியாது என அன்னராசா மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் வடமராட்சி கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கமும் கலந்து கொண்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )