
தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேயை சுட்டுக்கொல்ல அரசு திட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அரச பயங்கரவாதம் வளர்கின்றது. இதன் மூலம் எமது நாட்டுக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவருவதனை அரசே ஊக்குவித்து வருகின்றது. எனச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் வசந்த முதலிகேயை சுட்டுக்கொல்லும் திட்டம் அரசிடம் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் வசந்த முதலிகே உட்பட3பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தங்காலையில் 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்போது 48நாட்கள் ஆகின்றன. தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கு அவர்கள் செய்த தவறு என்ன?. அத்துடன் வசந்த முதலிகேயை இரவு நேரங்களில் கம்பஹா, மல்வானை எனப் பல்வேறு பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்வதாக அறியக் கிடைக்கின்றது. இரவு நேரத்தில் ஏன் அழைத்துச்செல்ல வேண்டும்? பகல் நேரத்தில் கொண்டுசெல்ல முடியாதா? இவ்வாறு இரவு நேரத்தில் அழைத்துச்சென்று திட்டமிட்டு அவரை கொலை செய்து, அவர் தப்பிச்செல்ல முற்பட்டபோது துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரிவிப்பீர்கள். அதனால் இதுதொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்.
அத்துடன் அரச விராேத குற்றத்துக்காகவே இவர்களை கொழும்பு கேஸ்பார்க் சந்தியில் இருந்தே கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டி, ஆர்ப்பாட்டம் செய்ய, ஊர்வலம் செல்ல இந்த நாட்டில் உரிமை இல்லையா? நாங்கள் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்கப்போவதில்லை. இவர்களுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரம் இல்லை. இது மிகவும் பயங்கரமான நிலைமை. ஜெனிவாவில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பேசப்படும் நிலையில் இவ்வாறான விடயங்கள் பொருத்தமா? ஜெனிவாவில் எமது நாட்டுக்கு எதிராக மேலும் பிரேரணைகளை காெண்டுவரவா இவ்வாறான வேலைகளை செய்கின்றீர்கள்?
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிக்கொள்வதாக தெரிவித்துக்கொண்டு, இவ்வாறு மாணவர்களை தடுத்துவைப்பது நியாயமா ?. உண்மையில் இங்கு இடம்பெறுவது அரச பயங்கரவாதம். பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி அரச பயங்கரவாதம் வளர்கின்றது. இது மிலேச்சத்தனமாகும். மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது. இது முட்டாள் தனமான அரசாங்கம். மாணவர்கள் வெளியில் வந்து அவர்களின் கருத்தை தெரிவிக்கும்போது, அவர்களை அடக்குவதற்கு முயற்சிக்கின்றது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடு, நாங்களே எமக்கு எதிராக மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவர உதவி செய்வது போன்றதாகும். அரசாங்கம் எமது நாட்டுக்கு எதிராக செயற்பட மனித உரிமை பேரவையை ஊக்குவிக்கின்றது.
பயங்கரவாதத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் இருக்கவேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கொழும்பு கேஸ்பார்க் சந்தியில் குண்டு வெடிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரளவின் கொலையை பயங்கரவாத செயல் என நான் ஏற்றுக்கொள்கின்றேன். பயங்கரவாதிகள், கொலையாளிகளை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. அதேபோன்று பல்கலைக்கழக பகிடிவதைக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். அவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி அப்பாவிகளை கைதுசெய்யவேண்டாம்.
எனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மாணவர்களை விடுதலை செய்து, விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

