ஊடகங்களின் இன்றைய வளர்ச்சி

ஊடகங்களின் இன்றைய வளர்ச்சி

மனித நாகரீக வளர்ச்சியில் தகவல்களை விரைவாகப் பகிர்ந்து கொள்ள ஊடகங்கள் உருவாகின. இரு வேறுபட்ட தரப்புகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளவே ஊடகங்கள்பயன்படுத்தப் படுகின்றன.

நவீன தொழில்நுட்பவசதிகளின் படி, உலகம் சுருண்டு நம் கைகளில் இன்று காணப்படுகிறது.தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயம் இன்று தொழில்நுட்ப ஊடக வசதியால் மெருகேறிஉடனுக்குடன் உலக நடப்புகளைப் பற்றிஅறிய முடிகிறது என்றால், அப் பெருமை
ஊடகங்களையே சாரும்.இது மிகையில்லை.

முன்னொரு காலத்தில் நாட்டின் தலைவர்கள் இன்னொரு நாட்டிற்கு
சேதி சொல்ல புறாக்கள்,மனிதனை (தூதுவன்) அனுப்பினார்கள்.நாட்டு மக்களுக்கு செய்தி சொல்ல நேரும்போதெல்லாம் முரசறிவித்து மக்களை ஓரிடத்தில் திரட்டி, பின்னர் செய்தி சொல்வர். பிற்கால நாகரீக வளர்ச்சியின்மாற்றத்தில் தபால்,பத்திரிகைகள்தோன்றி ஊடகத்துறை
உருவானது.இன்றும்பத்திரிகை வாசிப்பதைசிலர் தம் முக்கிய பணியாக மேற்கொள்கின்றனர்.

அறிவியல், விஞ்ஞான வளர்ச்சியானது காலப் போக்கில் பல ஊடகங்கள் உருவாகக் காரணமாயின.ஊடகங்கள் மக்களுக்கு பல தகவல்களை கொண்டுசெல்கின் றன.அரசியல், உலக நடப்பு, பொருளாதாரம், விளையாட்டு, அறிவியல்,பல்சுவை நிகழ்வுகள், பாடல்கள் என பலவகையான விடயங்களை உடனுக்குடன் அறிய ஊடகம் மிகப்பெரிய உதவியாகவிருக்கிறது. ஊடக மூலம்நவீன உலகின் பல்வேறுபட்ட கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் போன்றவற்றை இருந்த இடத்திலிருந்தே அதிகளவில் அறியமுடிகிறது.

உலகின் எந்த மூலையில் ஒரு நிகழ்வுநடந்தாலும்,அதனை
உடனேயே உலகுதெரிந்துகொள்ளும் அளவுக்கு தொழில் நுட்பம் விரைவு வளர்ச்சி கண்டுள்ளது.மாணவ சமுதாயம் புது புதுத் தகவல்களைஅறிந்து தம் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள முடிகிறது.நீண்ட தூரங்களில் இருக்கின்ற உறவினர்கள்,நண்பர்களுடன் விரைவாக தொடர்பு கொள்ள இந்தஊடகங்கள் உதவுகின்றன.இது மட்டுமல்லாது, ஊடகப் போட்டியானது ஊடகத்தை மேன்மேலும் வளர்த்துச் செல்கிறது.

அத்துடன் கொரோனா பெருந்தொற்று காலத்தில்,வீட்டிலிருந்தபடியே அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.ஆளையாள் பார்த்துப் பேசவியலாமல் இருந்த அந்த நேரத்தில் எத்தனை பேரின் மன உளைச்சலுக்கு ஊடகம் ஒரு அருமருந்தாக இருந்தது? நொடிக்கு நொடி மாறும் தொழில் நுட்பவசதிகளினால்,வெகுசன ஊடகங்களையும் தாண்டி அதை விஞ்சுமளவுக்கு சமூக வலைத்தளங்களை மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், பயன்படுத்துகின்றனர்.இது ஊடகத்துறையின்
பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.பெருந்தொற்றுக் காலத்தில் சமூக வலைத்தள வசதிகளும் இல்லாதிருந்தால் எங்கள் குழந்தைகளின் கல்வி என்னவாகியிருக்கும்?

இப்போது சாதகங்களை விட இவற்றால் எழும் பாதகங்களை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகாத பெற்றோரே இல்லையெனலாம். சமூகத்தில் சின்னத்திரையேகதியெனக் கிடப்போரும் இருக்கிறார்கள். மக்களைக் கிளர்ச்சியான நிலையில் வைத்திருப்பதற்காக சமூகத்திற்கு ஒவ்வாத குற்றங்கள் குடும்பங்களினுள் நிகழ்வதாகக் காட்டும் ஒரு ஊடகத்திற்கு போட்டியாக பிறிதொரு ஊடகம் இன்னுமொரு குற்றத்தைக் காட்டுகின்றது. மாமியார் மருமகளைக் கொல்லத் திட்டமிடுவதும், மருமகள் சாப்பாட்டில் விசம் கலப்பதும், வாகனத்தால் விபத்து ஏற்படுத்திக் கொல்வதும், கடத்தல், சொத்துச்சண்டை…. என்று குற்றப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. எதை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கும் இந்த சமுதாயத்திற்கும் சொல்ல வருகிறோம்? எந்த நல்லதை விட்டுச் செல்கிறோம்?

சுடச்சுடச் செய்திகள் என்ற பெயரில் எத்தனையோ திரிபடைந்த செய்திகளை போட்டிபோட்டுக்கொண்டு சில ஊடகங்கள் வெளிவிடுவதையும்பார்க்க முடிகிறது. தவறான இந்த நடவடிக்கைகள் எத்தனை பேரைப் பாதிக்கும்? ஊடகத்துறையில் உள்ளவர்கள் இத்தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மக்கள் சரியானது எது, தவறானது எது என்ற பகுத்தறிவுடன் தாமும் நடந்து, தம் குழந்தைகளையும் வழிநடத்தும்போது ஊடகத்துறையினால் விளையும் நன்மைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.

-பவானி

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )