
சர்வதேசத்தை தவறாகவழிநடத்த அரசாங்கம் முயல்கிறது; ஐ .நா. மனித உரிமைகள் பேரவையிடம் தமிழ் கட்சிகள் எடுத்துரைப்பு
அரசாங்கம் சர்வதேசத்துக்கு பிழையாக தகவல்களைக் கூறி தவறாக வழி நடத்த முய்றபடுதாக தமிழ்க் கட்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலக சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று 14.09.2022 புதன்கிழமை பிற்பகல் இணைய வழியில் இடம்பெற்றது.
இதில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தற்போதைய சூழ்நிலை குறித்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அரசாங்கம் பெருமளவில் கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய காணிகளை சுவீகரிப்பது மட்டுமன்றி, அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
அத்துடன், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வடக்கையும் கிழக்கையும் கூறுபோடும் வகையில் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் சர்வதேசத்துக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு பிழையான தகவல்களை வழங்கி தவறாக வழிநடத்த முற்படுகின்றனர் எனவும் தமிழ் கட்சித் தலைவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்தினர்.
அத்துடன், காணிகள் விடுவிக்கப்படுவதாகவும் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.
கடந்த 12 வருடங்களாக தமிழர்களுக்கு நீதி வழங்கப்படும் என ஐ.நா. மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றப்படவில்லை. ஐ,நா. மனித உரிமை பேரவை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டதை தவிர வேறொன்றும் நடக்கவில்லை.
அவ்வப்போது இலங்கையில் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கங்கள் காலத்தை இழுத்தடிப்புச் செய்ததே தவிர, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வொன்றும் கிடைக்கவில்லை.
எனவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் இலங்கை விடயத்தைக் கையாள வேண்டும் எனவும் தமிழ்க் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.