
ஐ.நா. தீர்மான நகல் வரைபு திருப்தியின்மை; மேலும் வலுவாக்க முயல்வோம்; தமிழ் தரப்புகள் தெரிவிப்பு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த நகல் வரைபு வெளிவந்துள்ள நிலையில் அது குறித்த திருப்தியின்மையை தமிழ்த் தேசியக் கட்சிகள் வெளியிட்டுள்ளன.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு வலியுறுத்திய போதும், இந்த விடயம் நகல் வரைபில் இடம்பெறவில்லை.
தமிழ் கட்சிகள் ஐ.நா. மனித உரிமகள் பேரவை இலங்கை தொடர்பான முதன்மைக் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கிய சில விடயங்கள் வரைவுத் தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ளதாக ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேன் தெரிவித்தார்.
எனினும் இது நகல் வரைபே தவிர இறுதி வரைபு அல்ல. இதில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்படலாம்.
இலங்கை தொடர்பான தீர்மானம் பிரித்தானியா தலைமையில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. இங்கிலாந்து ராணி இராண்டம் எலிசபெத் மறைவு காரணமாக வரைவு திருத்தப் பணிகள் அடுத்த வாரமே மீண்டும் தொடங்கும். இதன்போது உறுப்பு நாடுகளுடன் பேசி தீர்மானத்தை மேலும் வலுவானதாக மாற்ற தமிழ் கட்சிகள் முயற்சிகளை முன்னெடுக்கும் எனவும் ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேன் தெரிவித்தார்.