
மலையகத்தில் பட்டினி நிலை
மலையக மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தி விட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. வேலுகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு தற்போது ஆயிரம் ரூபாவை விட குறைந்த சம்பளமே கிடைக்கின்றது. 25 நாட்கள் வேலை செய்தாலும் 25 ஆயிரம் ரூபாவை விட குறைவான தொகையே அவர்களுக்கு சம்பளமாக கிடைக்கின்றது.
சமுர்த்தி உதவி கொடுப்பனவு, அரசாங்கத்தின் விஷேட நிவாரணங்கள் என எதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் நிரந்தர வேலை செய்வதாக அதற்கான காரணம் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடுமையான உழைப்பாளர்களான அவர்களுக்கு அநீதியே இழைக்கப்படுகிறது.
கோதுமை மா ஒரு கிலோ 360 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 350 ரூபாவாகவும் விற்கும்போது அவர்கள் ஒருவேளை உணவையாவது எவ்வாறு உண்ண முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
பெருந்தோட்ட நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் சிறந்த அனுபவம் கொண்டவர். அதனை கருத்திற்கொண்டு அந்த மக்களுக்கு விசேட நிவாரண திட்டங்களை நடைமுறைப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மந்தபோசனம் தொடர்பில் சபையில் பேசப்படும் நிலையில் மலையக மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தி விட வேண்டாம் என்றார்.