
வடக்கில் கடற்படை பெரும் அட்டகாசம்; சுயநினைவை இழக்கும் வரை தாக்கப்பட்ட குடும்பஸ்தர்
வடக்கிலுள்ள கடற்படையினருக்கு ”வெறி”வந்தால். அவர்கள் மதுபோதையில் நின்றால் அவர்களின் ”பைட்ஸ்”ஆக தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோஷனை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
வடக்கு மாகாணத்தின் இன்றைய நிலைமை மிக மோசம் ,கிழக்கின் நிலைமையும் மோசம் .கிளிநொச்சியிலுள்ள வலைப்பாடு என்ற கிராமத்தில் கடல்தொழில்தான் பிரதானமான தொழில். அந்த தொழிலுக்கு சென்ற இராசரத்தினம் நிமால் என்ற 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை கடந்த 4 ஆம் திகதி வலைப்பாட்டை சேர்ந்த கடற்படையினரால் மிக மோசமாக தாக்கப்பட்டு சுயநினைவற்ற நிலையில் விரைவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.
கடற்படை இவரை தாக்கியதற்கான காரணமென்ன? ஆயுதம் வைத்திருந்தாரா?குண்டுகள் வைத்திருந்தாரா?நாட்டுக்கு எதிராக செயற்பட்டாரா?கடற்படையினருக்கு வெறிவந்தால். அவர்கள் மதுபோதையில் நின்றால் அவர்களின் ”பைட்ஸ்”ஆக தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். தமிழர்கள் கொல்லப்படுகின்றார்கள். மிக மோசமாக தாக்கப்படுகின்றார்கள்.
இது மிக மோசமான நிலைமை. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்