யாருக்கு வெற்றி?

யாருக்கு வெற்றி?

கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பி ஓடியதும், பதவியைத் துறந்ததும் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வாண வேடிக்கைகளும், பட்டாசு வெடிகளும், ஆட்டமும் பாட்டமும், ‘கிரிபத்’ ஊட்டி மகிழ்வதுமாக 100 நாட்களைக் கடந்த தமது போராட்டத்திற்குக் கிடைத்த பெருவெற்றியென மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.போரை முடிவுக்குக் கொண்டுவந்து, சிங்களத்தைக் காக்கும் ‘நவீன துட்ட கைமுனு’ என்ற புகழாரத்துடன், அரியணையில் அமர்ந்து கோலோச்சியவன், குடும்பத்தோடு அடித்து விரட்டப்படுவது என்பது சாதாரணமானது அல்ல.கொடியவன் கோத்தபாய போனதும் நல்லாட்சி மலரப்போவதாக பாவம், இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போராடியவர்கள்.சமூக வலைத்தளங்கள் முழுவதும் இந்த வெற்றிக் கொண்டாட்டங்களால் நிரம்பி வழிகின்றன.

எதிர்பாராமல் கிடைத்த குருட்டு அதிஷ்டம் என்று ஒரு சிலர் நம்பினாலும், திட்டமிட்டுக் காய் நகர்த்தியதன்பெறுபேறாக, பதில் சனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்திருக்கிறார் நரித் தந்திரத்திற்குப் பெயர் போன ஐயா ரணில் விக்கிரமசிங்க. வந்தவுடனேயே அதிகாரத்தைக் கையிலெடுத்துவிட்டார். அவசரகாலச் சட்டம், ஊரடங்கு உத்தரவுகள் என அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. போராட்டக்காரர்களாக இருந்தவர்கள் இப்போது கலகக்காரர்களாக அடையாளம் காட்டப் பட்டிருக்கின்றனர். இதுவரை போராட்டத்தை வேடிக்கை பார்த்த இராணுவத்தினர் இப்போது விறைப்பாக நிற்கிறார்கள். கோத்தபாய ஓடிப்போகும் வரை கண்ணில் தென்படாத எரிபொருட் கப்பல்கள் அவர் போனவுடன் வந்து சேருகின்றன. எரிபொருளின் விலையும் குறைக்கப் பட்டு விட்டது. கடந்த மூன்று மாதகால நெருக்கடி நேரத்தில்,சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தவர்கள் மேல் நடவடிக்கையும் எடுக்கப் போகிறாராம் பதில் சனாதிபதி.

கோத்தபாய ஓடிப் போனதற்கும், ரணில் பதவியேற்றதற்கும் பின்னால் பெரிய தலைகள் திட்டமிட்டு செயற்பட்டிருப்பது தெளிவாகப் புலப்படுகிறது.
தமிழ்மக்களைக் கொன்று குவித்து, அவர்கள் உடமைகளைச் சூறையாடி,
சொந்த இடங்களிலிருந்து விரட்டியடித்த ஒரு இனப் படுகொலையாளன் கோத்தபாய.தன்னைப் பூசித்த மக்களாலேயே கோத்தபாய விரட்டியடிக்கப் பட்டது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ‘காலம் கடந்து கிடைத்த ஒரு தீர்ப்பு’.ஆனால்,தமிழ் மக்களுக்கு இழைத்தது போல, சிங்கள மக்களுக்குகோத்தபாய பெரிதாக எந்தத் தீங்கும் செய்யவில்லை – எல்லா அரசியல்வாதிகளையும் போல ராஜபக்ச குடும்பமும் ஊழல் செய்ததைத் தவிர.அப்படியிருக்க, எவ்வாறு இப்படியொரு பிரம்மாண்டமான மக்கள் எழுச்சி ஏற்பட்டது? அல்லது ஏற்படுத்தப்பட்டது? பின்னணியில் யார் இருக்கிறார்கள்? கோத்தபாய ஓரங்கட்டப் படுவதால் யாருக்கு நன்மை? திடீரென்று எவ்வாறு எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு வந்தது? கோத்தா போன கையுடன், நாட்டினுள் மறுபடியும் எரிபொருள் வந்திறங்கியது எப்படி? இவ்வாறு பல்வேறு வகையான ஐயப்பாடுகளின் பின்னணியில் பிரச்சனையை ஆராய வேண்டியுள்ளது.

சீனாவின் பக்கம் சாயும்கோத்தபாயவின் கொள்கைகளின் மேல் சர்வதேச மட்டத்தில் சில நாடுகள், குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, கடும் அதிருப்தியுடன்இருப்பது வெளிப்படை. மக்கள் பலத்துடன் கோலோச்சும் ஒரு குடும்பத்தை பதவியில் இருந்து இறக்குவதும் தமக்கு சார்பானவர்களை பதவியில் ஏற்றுவதும்யாருக்கும் அவ்வளவு எளிதான விடயமல்ல.தவிரவும், ராஜபக்ச குடும்பத்தினரின் கையில் முக்கியமான அத்தனை அமைச்சுகளும் இருக்கின்றன. குடும்பத்தினர் மிகவும் ஒற்றுமையாக, பிளவுபடுத்த முடியாதவாறு இருக்கிறார்கள். எனவே, அவர்களை உச்சத்தில் ஏற்றி வைத்த மக்களை வைத்தே அவர்களைப்பதவியிறக்கத்தீர்மானித்ததில்தான் இந்திய, அமெரிக்க கூட்டுப் புலனாய்வு நடவடிக்கைகள் வெற்றி பெற்றிருப்பதாகத் தெரிகிறது.மக்களை எதிர்க்க வைக்கவேண்டும், கோத்தபாயவின் தீவிர விசுவாசிகளான முப்படைகளையும் அவரிடமிருந்து பிரிக்க வேண்டும். இவ்விரு வேலைகளும் ஒரு குறுகிய காலத்துக்குள்செய்து முடிக்கப் பட்டிருக்கின்றன.

இலங்கை கடன்சுமையில் இருப்பதைக் காரணம்காட்டி, இலங்கைக்குக் கடன் வழங்குவதைத் திட்டமிட்டு நிறுத்தியதன் மூலம் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் இவர்கள். அந்நிய செலாவணி கையிருப்பு தீர்ந்து போக, பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையை உருவாக்கி, பணவீக்கத்தை அதிகரித்திருக்கிறார்கள். மக்கள் பஞ்சத்தில் வாடும் நிலையில், எரிபொருள் வழங்கலும் முற்றாக நிறுத்தப்பட,வேறு வழியில்லாமல் வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் மக்கள். சிறுசிறு குழுக்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து குரல் கொடுத்தவர்கள்,இதுவரை காலமும் இல்லாதவாறு,திடீரென்று, குறுகிய கால இடைவெளியில் ஒன்றிணைந்து, ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் ஒரு போராட்ட சக்தியாகப் பரிணமித்து இருக்கிறார்கள். காலிமுகத் திடலில் குடியேறி ‘கோத்தா கோ கம’ கிராமத்தையேஉருவாக்கி விட்டார்கள். இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது, ஒரு மக்கள் சக்தி தானாகப் பரிணமித்ததாகத் தெரியவில்லை. பின்னணியில் ஒரு சக்தி இருந்து இவர்களை ஆட்டுவிப்பது தெளிவாகப் புலப்படுகிறது. இந்த சமயத்தில், இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவருடன் வந்த அவரது காப்பாளர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பவில்லை என்ற பத்திரிகைச் செய்தி ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது.

எரிபொருள் இல்லாமல் நாடு முழுவதும் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றபோதும் போராட்டக்காரர்களுக்குதட்டுப்பாடு எதுவும் இருக்கவில்லை. மூன்று மாத காலத்திற்கும் மேல் அவர்கள் போராட்ட களத்தில் நிற்கிறார்கள், இருந்தும் உணவிற்கோ குடிநீருக்கோ அல்லது பிற வசதிகளுக்கோ எந்தக் குறைபாடும் வரவில்லை. ‘அரகாலியா’ எனப்படுகின்ற இந்த ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டக் குழுவில் சுமார் 70 இற்கும் மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இடதுசாரி, வலதுசாரிகள், தீவிர இடதுசாரிகள், மாணவர்கள் என்று வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டவர்கள் அனைவரும் கோத்தாவை வெளியேற்றுவதற்காக மட்டுமேஒன்றாகக்கூடி ஒரு மக்கள் பேரெழுச்சியை நடத்தினார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. இந்தப் பேரெழுச்சிக்கு செலவழிக்கப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது?போராட்டத்தின் முன்னணியில் நின்ற மத்திய வர்க்க, ஓரளவு மேல் வர்க்கத்தவர்களோடு,தமக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அப்பாவி ஏழைமக்களும் இணைந்து கொண்டதால் இந்தப் பிரம்மாண்ட எழுச்சி சாத்தியமாகி இருக்கிறது.

சனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம், ரூபவாகினி கூட்டுத்தாபனம் என்று அரச கட்டடங்களை மக்கள் பேரெழுச்சியாகக் கைப்பற்றியபோது, ஈரானில் ‘மன்னர் ஷா’விற்கு எதிராக வெடித்த போராட்டம் போல, ஒரு நம்பகத் தன்மை தெரிந்தது உண்மைதான்.ஆனால், போராட்டக்காரர்களிடம் ஒரு தெளிவான அரசியற் திட்டமோ அல்லதுஅவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வழிநடத்தும் ஒரு தலைமையோ இருக்கவில்லை, எல்லாவற்றையும் விட முக்கியமாக, போராட்டத்தில் கிடைத்தவெற்றியைத் தக்கவைக்கும் எந்த ஆயுத பலமும் அவர்களிடம் இருக்கவில்லை. அமைதியாக, அரச கட்டடங்களை விட்டு வெளியேறுகிறோம் என்ற அறிவித்தலுடன் அவர்கள் பின்வாங்கியபோதே இந்த நாடகத்தில் அவர்களின் பாத்திரம் நிறைவுற்று விட்டது என்பது புலனாகியது.

மறுபுறத்தில், ரணில் பிரதமராகியதும்‘இனித்தான் பிரச்சனை பெரிதாக வரப்போகிறது’ என்று ஆரூடம் சொன்னதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இனப்படுகொலைகளுக்கு நீதி கேட்டு ஐ.நா வின்முன் பல வருடங்களாகப் போராடும் ஈழத்தமிழர்களால் ராஜபக்ச குடும்பத்திற்கு வரவிருந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நரி வேலையையும் ஐ.நாவில் செய்து முடித்திருந்தார் அவர். ராஜபக்ச குடும்பத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருப்பவர், வளைந்து கொடுத்து தன் காரியத்தை சாதிக்க வல்லவர் என்று பெயர் பெற்றிருப்பவர், கோத்தாவுக்கு ஏற்ற மாற்றீடாக அமெரிக்க, இந்தியக் கண்களுக்குத் தெரிவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகியவர் ரணில். அவரது கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரும் இவர்தான். மகிந்த பிரதமர் பதவியில் இருந்து விரட்டப்பட்ட போது பிரதமராக அவதாரம் எடுத்து, கோத்தா தோற்று ஓடியபோது பதில் சனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்து, இதோ… தோற்றுப் போன கட்சியைச் சேர்ந்தாலும் மொட்டுக் கட்சியின் பேராதரவுடன் சனாதிபதியாக பதவியேற்கவும் தயாராகி விட்டார் அவர். இவ்வளவும் மூன்று மாதகால இடைவெளியில்.

இராணுவத்தின் வகிபாகத்தைப் பார்த்தால்…..கோத்தாவின் பலமாக, அவரின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தவர்கள் இராணுவத்தினர். இவர்களை நயமாகப் பேசியும் பயமுறுத்தியும் வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலதிக பயிற்சிகள், கூட்டுப் பயிற்சிகள், சிறப்புப் பயிற்சிகள் என்று அமெரிக்காவுக்கும், இந்தியாவிற்கும் பறந்தநடுத்தர மட்ட அதிகாரிகள், அங்கு புலனாய்வாளர்களால் தொடர்ந்தும் மூளைச்சலவை செய்யப் பட்டிருக்கிறார்கள். இந்த அதிகாரிகள்தமிழர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின்போது இளம் சிப்பாய்களாக இருந்தவர்கள், சண்டைகளில் நின்று அவர்களின் மேலதிகாரிகள் சொன்னதை நிறைவேற்றியவர்கள். இப்போது அதிகாரிகள் ஆகியிருக்கிறார்கள். ‘தண்டனை என்று வரும்போது எல்லா உயரதிகாரிகளும் சிப்பாய்களாகவிருந்த உங்கள்மேல் பழியைப் போட்டு தாங்கள் தப்பித்து விடுவார்கள்’என்று அவர்களை நம்ப வைத்தும்,தாம் சேகரித்து வைத்திருந்த, யுத்தகாலத்தில் சிப்பாய்கள் செய்த கொடூரங்களின் சாட்சியங்களை அவர்களுக்குக் காட்டி, தமது சொற்படி நடக்காவிட்டால் இவை ஐ.நா விற்கு அனுப்பப்படும் என்றும் பயம் காட்டியும்அந்த அதிகாரிகளைத் தம்வசம் ஆக்கியுள்ளனர் அந்நிய புலனாய்வாளர்கள்.

கோத்தபாய உத்தரவிட்டும், இராணுவம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் காரணம் இதுதான்.இதனால்தான், கட்டளைக்கு அடிபணிய மறுத்த சவேந்திர சில்வா பதவி உயர்வு என்ற பெயரில் காணாமற்போய், லியனகே அவரின் இடத்திற்கு நியமிக்கப் பட்டிருந்தார். ரணில் பதில் சனாதிபதி ஆகியதும் மறுபடி லியனகே காணாமற் போயிருக்கிறார், சவேந்திர சில்வா மீண்டும் இராணுவத்தின் கட்டளையதிகாரி ஆகியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், கொழும்பு நகரில் இராணுவத்தினர் குவிக்கப் படுவதும், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், ரணிலின் பின்னால் இராணுவத்தினர் இருப்பதை உறுதி செய்கின்றன. திட்டமிட்டபடி, ரணில் பதவிக்கு வந்ததும் ராணுவம் நாட்டின் அதிபரின் கட்டளையின் கீழ் இயங்கத் தயாராகிவிட்டது. ஆட்டத்தைக் கலைக்க மக்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கப்பல்கள் வரத் தொடங்கிவிட்டன. போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டிய மேற்தட்டு, மத்தியதர வர்க்கத்தினர் இப்போது எங்கேயென்றே தெரியவில்லை.

போராட்டம் நடைபெறும்போது வாளாவிருந்த உலகநாடுகள் இப்போது கலகக்காரர்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட வேண்டும் என்கின்றன. இலங்கையிலும், போராட்ட வீரர்களாகப் போற்றப்பட்டவர்கள் இன்று கலகக்காரர்களாகி விட்டனர். அவர்கள் இராணுவத்தால் தாக்கப் படுகின்றனர், கைதுகள் இடம் பெற்றிருக்கின்றன, சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாக அவர்கள் மேல் வழக்குகளும் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

மொத்தத்தில், நடந்ததைப் பார்த்தால்……

  1. மேற்கு நாடுகளுக்கு சார்பான ரணில் விக்ரமதுங்க பதவியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார். இவர் ராஜபக்ச குடும்பத்தவருக்கும் ஆதரவாக இருப்பதால் அவர்களின் ஆதரவும் ரணிலுக்கு உண்டு. பதிலுக்கு, ராஜபக்சர்களையும், அவர்களின் சொத்துக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கிறார் ரணில். அவர்கள் மீளவும் அரசியலில் திரும்பி வருவதற்குச் சாத்தியமான பாதையையும் திறந்து வைத்திருப்பார் ரணில்.
  2. மேற்கிற்கு பிடிக்காத கோத்தா குடும்பம் அப்புறப் படுத்தப்பட்டு விட்டது.
  3. இராணுவம் ரணிலுக்குச் சார்பானதாக மாற்றப்பட்டு விட்டது. சர்வ அதிகாரங்களும் இப்போது ரணிலிடம் உள்ளன. ஆட்டுவிப்பவர்கள் சொல்லுக்கு ஆடத் தயாராகிவிட்டார் ரணில்.
  4. எரிபொருளுக்காக புரட்சி செய்த மக்கள் கூட்டம் எரிபொருள் வரத் தொடங்கியதும் சமாதானமாகி விட்டார்கள். சோற்றுச் சண்டைபோல் முடிந்தது மக்கள் கிளர்ச்சி.
  5. தமிழரின் பிரச்சனைகள் எவையும் தீர்க்கப்படவில்லை.பழம்பெரும் தமிழ் அரசியல்வாதிகள் ஆதாயத்தைப் பார்த்து எந்தப் பக்கம் சேர்வார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும். திரைமறைவில்,இனப்படுகொலையாளர்களைக் காப்பாற்றும் சிங்கள அரசின்நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.சர்வதேசம், தனக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்ள மட்டுமே தமிழர் பிரச்சனையைக் கையிலெடுக்கிறது. தமிழர் பிரதேசத்தை அபகரித்து சிங்கள பூமியாக்கும் சிங்களத்தின் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இப்போது சொல்லுங்கள்… வெற்றி பெற்றவர் யார்?

-பாரி

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )