
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் வடக்கு மீனவர்களுக்கே அதிகம் பாதிப்பு; நாமல் எம்.பி. தெரிவிப்பு
விடுதலைப் புலிகள் போராளிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை போன்று மீனவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்று கடற்றொழில் அமைச்சர் ஆராய வேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளினால் வடக்கு மீனவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி. நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் கடற்றொழில், கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.கிராமிய பொருளாதாரத்துக்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 35 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரையான காலப்பகுதியில் வெறும் 1 பில்லியன் ரூபா மாத்திரமே செலவழிக்கப்பட்டுள்ளது.
கிராமிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் விவசாய அமைச்சர் நெற்பயிர்ச்செய்கையை மூன்றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும் என்கின்றார் . இறக்குமதி விவசாயத்தையே இந்த அரசாங்கம் நம்பியுள்ளது. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஒருசில வர்த்தகர்களின் நலனை கருத்திற் கொண்டு வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
அரச சேவையாளர்கள் உட்பட தனியார் துறையினர் சம்பள அதிகரிப்பு கோரி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் சுற்றுலா செல்வதற்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரவில்லை. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. பட்டினியில் வாடாமல் சாப்பிட்டு வாழ்வதற்கே சம்பளத்தை அதிகரிக்குமாறு கோருகிறார்கள்.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து விட்டது என்று ஜனாதிபதி கூறுகின்றார் . ஆனால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் எதிர்வரும் மாதம் பணவீக்கம் 9 சதவீதமளவில் அதிகரிக்ககூடும் என்கின்றார் ஆகவே யார் கூறுவது உண்மை?
விடுதலைப் புலிகள் போராளிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை போன்று மீனவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராயுமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இராஜதந்திர மட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளினால் வடக்கு மீனவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

