கைதடி வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு புலம்பெயர் உறவுகள் வழங்கும் 7 லட்சம் டொலரைத் தடுத்த அரசு

கைதடி வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு புலம்பெயர் உறவுகள் வழங்கும் 7 லட்சம் டொலரைத் தடுத்த அரசு

எம்மிடம் பிரதேச வேறுபாடு இல்லை, இனவாதமில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்த அரசாங்கமும் தமிழ் மக்களையும், தமிழ் பிரதேசங்களையும் புறக்கணிக்கிறது.கைதடி ஆதார வைத்தியசாலைக்கு சத்திரசிகிச்சை அறையை நிர்மாணிப்பதற்கு பலமுறை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தும் தீர்வு கிடைக்காத நிலையில், அந்த வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க புலம்பெயர் உறவுகள் முன்வந்துள்ள நிலையில் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட எம்..யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் பொறுப்பேற்கவுள்ளதாக க குறிப்பிடப்படுகின்றது . ஆனால் அண்மையில் அந்த வைத்தியசாலைக்கு 180 தாதிய நியமனங்கள் வழங்கப்பட்டன. அந்த நியமனங்கள் வழங்கப்பட்டு ஒரு சில நாட்களில் 103 நியமனங்கள் பிறதொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன. தற்போதும் அங்கு 105 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதுதான் உண்மை. அந்த வைத்தியசாலையில் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லை. வுழங்கப்பட்ட நியமனங்களை மாற்றியமைப்பது முற்றிலும் தவறானது.

வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.இந்த தீர்மானத்தை மக்கள் வரவேற்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அரச வைத்தியசாலைகளில் பல குறைபாடுகள் காணப்படுகின்ற நிலையில் மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள அரச வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதால் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

வடக்கு மாகாணத்தில் கடந்த 13 ஆண்டுகாலமாக சுகாதார சேவையில் காணப்படும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. எம்மிடம் பிரதேச வேறுபாடு இல்லை, இனவாதமில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்த அரசாங்கமும் தமிழ் மக்களையும், தமிழ் பிரதேசங்களையும் புறக்கணிக்கிறது. கடந்த அரசாங்கங்களை போன்றே செயற்படுகிறது.

கைதடி ஆதார வைத்தியசாலைக்கு சத்திரசிகிச்சை அறையை நிர்மாணிப்பதற்கு பலமுறை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தும் தீர்வு கிடைக்காத நிலையில்,அந்த பிரதேச மக்கள் புலம்பெயர் உறவுகளின் உதவியை நாடினார்கள்.அதற்கமைய அந்த வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க புலம்பெயர் உறவுகள் முன்வந்துள்ள நிலையில் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அந்த திட்டத்தை இழுத்தடிக்கும் வகையில் செயற்படுகிறது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )