சர்வதேச நீதிமன்றின் மியான்மார் இனப்படுகொலை தீர்ப்பு; தமிழ் மக்கள் ஒரு ஜனநாயகப் புரட்சிக்குத் தயாராக வேண்டும்;  4 நாட்களில் பறிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் உயிர்கள்

சர்வதேச நீதிமன்றின் மியான்மார் இனப்படுகொலை தீர்ப்பு; தமிழ் மக்கள் ஒரு ஜனநாயகப் புரட்சிக்குத் தயாராக வேண்டும்;  4 நாட்களில் பறிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் உயிர்கள்

சர்வதேச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மியான்மார் நாடு தொடர்பாக மிகவும் முக்கியமானதொரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. 2017 ஆம் ஆண்டில் மியான்மார் நாட்டில் மியான்மார் அரச படைகளால் 47 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது அப்பட்டமான இனப் படுகொலை எனச் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்காலில் யுத்தத்தின் கடைசி நான்கு நாட்களில் மாத்திரம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேருக்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டனர். அவ்வாறானால் ஏன் எங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை?, ஏன் இன்னும் சர்வதேச விசாரணை நடாத்தப்படவில்லை? ஏனெனில், தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் தமிழ்மக்களுக்கு நேர்மையாக இல்லை. அவர்கள் சர்வதேச விசாரணையைக் கேட்காமல் தொடர்ந்தும் இலங்கை அரசைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் அறைகூவல் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள் வருடம் தோறும் மாவீரர் வார காலப் பகுதியில் மாவீரர்களின் படங்களுக்குப் பூப் போட்டு, அழுதுவிட்டு மாத்திரம் செல்வதால் பயனில்லை. நேர்மையானவர்கள் யாரென்பதைத் தீர்மானித்து தமிழ்மக்கள் ஒரு ஜனநாயகப் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.

மியான்மாரில் 47 ஆயிரம் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது இனப்படுகொலை என்றால் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேருக்கும் அதிகமானவர்கள் நான்கு நாட்களில் படுகொலை செய்யப்பட்டது ஏன் இனப் படுகொலை ஆகாது? என நாம் ஒவ்வொருவரும் கேள்வி கேட்க வேண்டும்.

நாங்கள் போராட்டத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது. எங்கள் போராட்ட வரலாறுகளை எமது அடுத்த சந்ததிக்குச் சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும். நாங்கள் போராட்டத்தை மறந்ததன் விளைவுதான் எங்களின் இளைஞர் சமூதாயம் இன்று தறிகெட்டுத் திரிவதற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )