யாழ். மாணவர் பாராளுமன்ற நிகழ்வில் இராணுவ அதிகாரி; விசாரணை நடத்தக் கோரும் ஆசிரியர் சங்கம்

யாழ். மாணவர் பாராளுமன்ற நிகழ்வில் இராணுவ அதிகாரி; விசாரணை நடத்தக் கோரும் ஆசிரியர் சங்கம்

யாழ். மெதடிஸ்ட் பெண்கள் உயர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்படி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற போது, அந்த நிகழ்வுக்குப் பருத்தித்துறையில் உள்ள 521 ஆவது படையணியின் கட்டளையதிகாரி பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கான சுற்றறிக்கைகளை மீறி ஒரு வெளித் தரப்பினர் மாணவர் பாராளுமன்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் நேற்று வியாழக்கிழமை கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலமான முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாணவர் பாராளுமன்றம் தொடர்பாகக் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்ட 03/2019 என்ற சுற்றறிக்கையின் மீறலாகும். அந்தச் சுற்றறிக்கையின் 1.10 ஆம் பிரிவை இங்கு மேற்கோள் காட்டுகிறோம். இதன்பிரகாரம் இது முற்றிலும் கல்வி சார்ந்த செயல்பாடு என்பதால், கல்வித் துறையைச் சாராதவர்கள் மன்றக் கூட்டங்களின் போது விருந்தினர்களை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நீண்டகாலமாகப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் இதயங்களில் உள்ள அந்தத் துயரங்களிலிருந்து இன்னும் விடுபட முடியாமல் தவிக்கும் வேளையில் அவர்கள் ஒரு குடிமைச் சமூகமாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு அவசரமாக வழங்கப்பட வேண்டும். இத்தகைய நேரத்தில் வடக்குப் பகுதி மக்களின் இதயங்களில் அரசின் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாகக் கல்வி முறையில் கூட இதுபோன்ற இராணுவ மயமாக்கலை வெளிப்படுத்துவது ஆறாத புண்ணை மீண்டும் கிளறுவதைப் போன்றது.

சுற்றறிக்கைகளை மீறிக் கல்வி அமைச்சு அதிகாரிகளும் பங்கேற்றுள்ள நிலையில் ஒரு இராணுவ அதிகாரி பள்ளி அமைப்பில் ஈடுபட்டிருப்பது குறித்து அவசர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )