பௌத்த சாசனத்தை அவமதித்தால் 1956 ஐப் போன்ற புரட்சி வெடிக்கும் – விமல் எச்சரிக்கை

பௌத்த சாசனத்தை அவமதித்தால் 1956 ஐப் போன்ற புரட்சி வெடிக்கும் – விமல் எச்சரிக்கை

இலங்கையில் பௌத்த சாசனத்துக்கு மதிப்பளிக்காமல் நாட்டை நிர்வகிக்க முற்பட்டால், 1956ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்றதொரு புரட்சி மகாசங்கத்தினரின் தலைமையில் மீண்டும் ஏற்படக்கூடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய சூழ்நிலையை அவதானித்தால், இச்சமூகத்தில் 1956ஆம் ஆண்டில் ஏற்பட்டது போன்றதொரு புரட்சியே அடுத்து ஏற்படக்கூடும் எனக் கருதுகின்றேன்.

இந்த நாட்டில் பௌத்த சாசனத்தை வீழ்த்தி, அது குறித்து கவனம் செலுத்தாமல் நாட்டை நிர்வகிக்க முற்பட்டால் அதற்கு எதிராக மகாசங்கத்தினர் கிளர்ந்தெழுவார்கள்.

குறிப்பாக, மக்களின் மனங்களில் தேங்கியிருந்த வேதனைகளே ஞானசார தேரர் விவகாரத்தின் ஊடாகத் தற்போது வெளிப்படுகின்றது.

சமூக வலைத்தளங்களில் பிக்குகளுக்கு எதிராகத் தீவிரமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமது நாட்டில் பௌத்த சாசனத்துக்கு எதிராக இதற்கு முன்னர் இவ்வாறு நடந்ததில்லை.

சிங்கள மொழியும், பௌத்த தர்மமும், சிங்கள மக்களும் ஒன்றிணைந்த நிலையிலேயே இருந்தனர். அதனை ஒருபோதும் உடைக்க முடியவில்லை.

எனவே, பௌத்த சாசனத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் போது, எவரும் எதிர்பாராத விதத்திலேயே அது தொடர்பான வேதனை வெளிப்படும். மீண்டும் மகாசங்கத்தினர் தலைமையில் 1956இல் ஏற்பட்டது போன்றதொரு புரட்சியே ஏற்படக்கூடும்.

அப்போது எவரும் இலகுவில் அதிகாரத்தைப் பெற முடியாது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலைப் பொறுப்பேற்றே செயற்பட வேண்டி ஏற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )