22ஆவது திருத்தச் சட்டத்தால் அரசுக்குள்ளும் ஆதரவுத் தரப்பினருக்கும் இடையில் பிளவு!

22ஆவது திருத்தச் சட்டத்தால் அரசுக்குள்ளும் ஆதரவுத் தரப்பினருக்கும் இடையில் பிளவு!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் காரணமாக அரசுக்குள்ளும், அரசுக்கு ஆதரவு வழங்கும் தரப்பினருக்கு இடையிலும் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் சட்டம் மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் குறித்துத் தெளிவான புரிதல் கொண்ட எவரும் இந்தத் திருத்தத்தை ஆதரிக்க மாட்டார்கள். இலங்கையிலுள்ள 99 சதவீதமான சட்டத்தரணிகள் இந்தத் திருத்தத்தால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை உணர்ந்து இதற்குத் தீவிர எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகள் சங்கம் மற்றும் நீதிச் சேவை உத்தியோகத்தர்களும் இந்தத் திருத்தத்துக்குத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இந்த 22ஆவது திருத்தமானது முற்றிலும் அர்த்தமற்றதுடன், தேவையில்லாத புதிய சிக்கல்களை உருவாக்கி நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத் தன்மையைப் பாரிய நெருக்கடிக்குள் தள்ளும் ஒரு நடவடிக்கையாகும்.

இந்த அரசமைப்புத் திருத்தச் சட்டத்தால் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக, அரசின் ஒரு பகுதியினர் அரசை விட்டுப் பிரிந்து சென்றுள்ள உண்மை நிலையை அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்திலேயே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், காலையில் நாடாளுமன்றத்தில் இவ்வாறான ஒரு கருத்தைத் தெரிவித்த அமைச்சர், மாலையில் தான் அவ்வாறு கூறவே இல்லை என்று தனது சொந்தக் கருத்தை மறுத்துப் பேசியுள்ளார்.

ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் அவர் வெளியிட்ட முரண்பாடான கூற்றுக்களை ஒன்றாக வைத்துப் பார்க்கும்போது, 22ஆவது திருத்தப் பிரச்சினையால் தற்போதைய அரசு எந்தளவுக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது. – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )