
இலங்கையின் கோரிக்கையையும் மீறி முன்னேறுகிறது சீனக்கப்பல்; அம்பாந்தோட்டையை நாளை காலை வந்தடையும்?
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி சீனாவின் ஏவுகணை அவதானிப்பு மற்றும் கண்காணிப்பு கப்பல் தொடர்ந்து பயணித்துகொண்டிருக்கின்றது .இக்கப்பல் இந்திய நேரப்படி நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் அம்பாந்தோட்டையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என் .டி .ரி . வி .செய்தி சேவை நேற்று தெரிவித்தது
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் இந்தக் கப்பல் குறித்து இந்தியா கவலை தெரிவித்துவருகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், 23,000 தொன் எடையுள்ள யுவான் வாங் 5என்ற இந்தக்கப்பல் இந்தோனேசியக் கடற்கரையிலிருந்து மேற்கே மணிக்கு 26 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது
இந்திய அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்துநேற்று முன்தினம் திங்கட் கிழமை. இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்தை அணுகி, கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு சீன அரசாங்கதிடம் கேட்டுக் கொண்டது.
“மேலும் ஆலோசனைகள் தேவைப்படுவதால், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு , கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு அமைச்சு தகவல் தெரிவித்தது” என்று இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது.
அதேவேளை , “சீனாவின் அறிவியல் ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான வழியில் பார்க்க வேண்டும் என்றும் , சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பைத் தொந்தரவு செய்வதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துவதாகவும் ” பெய்ஜிங் கூறியிருந்தது .
செயற்கைக் கோள்கள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான ஏவுகணைகளை கண்காணிக்க பயன்படும் என்பதால், இந்துசமுத்திரத்தில் இந்தக் கப்பல் பிரசன்னமாகியிருப்பது குறித்து புதுடில்லி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. 400 பணியாளர்களைக் கொண்ட யுவான்வாங் கப்பலில் பல அதிநவீன பரவளைய கருவிகள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பாரதூரமான பாதுகாப்பு விளைவுகளை கொண்டிருப்பதாக இந்தியா கருதுகிறது.
ஒடிசா கடற்கரையில் இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை கண்காணிப்பதன் மூலம், ஏவுகணைகளின் செயல்திறன் மற்றும் அவற்றின் துல்லியமான எல்லைகள் குறித்த தகவல்களை சீனாவால் சேகரிக்க முடியும்.
கப்பலின் முன்னேற்றத்தை அவர்கள் கண்காணித்து வருவதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1.4 பில்லியன் டொலர் அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக பெய்ஜிங்கிற்கு பெரும் தொகையை செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை இருப்பதால் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்தியா சந்தேகிக்கின்றது.

