
புதிய அரசியலமைப்பு: “பாதி வழி வந்த பின் மீண்டும் தொடங்க வேண்டாம்”; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும், ஒரு இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தைக் கடந்ததன் பின்னர், அதனைப் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தமிழ் பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்துள்ளார்.
அதேவேளை மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தம் வழங்கிவரும் நிலையில், நாட்டுக்கு வருகைதரும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மீளவும் அவ்விடயத்தை வலியுறுத்துவார் என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.இலங்கை செய்திகள்
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் பி.ப 4.30 – 6.00 மணி வரை நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியனும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதனும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி, மொஹமட் தாஹிர் மற்றும் மொஹமட் தாஹிர் ஆகியோரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமானும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் பாரத் அருள்சாமியும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே 1988 – 1989 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தமிழ்பேசும் கட்சிகளின் கூட்டணியாக இணைந்து செயற்பட்டதாகவும், தற்போதும் இருதரப்பும் பல்வேறு விடயங்களில் கூட்டாக இயங்கினாலும், இப்போதுதான் ஒரு கட்டமைப்பாக இணைந்திருப்பதாக தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் தெளிவுபடுத்தினர்.
அதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை (3) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்புக்கள் மற்றும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
குறிப்பாக ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பித்தல், மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துதல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், மலையக மக்களுக்கான காணிப்பகிர்வு மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட விடயங்கள் பற்றியும், அவற்றுக்கு ஜனாதிபதி அளித் பதில்கள் குறித்தும் அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் விளக்கமளித்தனர்.
அவற்றை செவிமடுத்த உயர்ஸ்தானிகர், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துதல் உள்ளடங்கலாக இவ்வனைத்து விடயங்கள் தொடர்பில் இந்தியா ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு அழுத்தம் வழங்கியிருப்பதாகவும், அதற்கமைய இன்றைய தினம் (5) நாட்டுக்கு வருகைதரவுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அதனை மீண்டும் வலியுறுத்துவார் எனவும் உறுதியளித்தார்.
அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினை முக்கியமானதும், கரிசனைக்குரியதுமான விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர், மலையகத்தில் ‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணி வழங்கல் பற்றியும் விபரமாகக் கேட்டறிந்துகொண்டார்.
அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தைப் பொறுத்தமட்டில், ‘தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை கைவிட்டு, மீண்டும் பூச்சியத்திலிருந்து முழுமையாக ஆரம்பிக்கப்போகிறீர்களா?’ என தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் உயர்ஸ்தானிகர் வினவினார். அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள், தற்போது மாகாணசபைகள் முறைமை உள்ளிட்ட சில கூறுகள் மூலம் அதிகாரப்பகிர்வுக்கான கட்டமைப்பொன்று அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை முற்றாக அழித்துவிட்டு, மீண்டும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிப்பது ஆபத்தான விடயம் எனச் சுட்டிக்காட்டினர். எனவே புதிய அரசியலமைப்பு எனும்போது தற்போது இருப்பதை விடவும் கூடுதலான அதிகாரப்பகிர்வு பற்றியே தாம் பேசுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர், இவ்விடயத்தில் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும், ஒரு இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தைக் கடந்ததன் பின்னர், அதனைப் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என்று தெரிவித்தார்.

