
இவர் நாட்டின் சொத்து சஜித்தை நினைத்து அரசு மகிழ்ச்சி
உலக காலநிலை கூறக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் இருப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எல்நினோ காலநிலை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல் நினோ நிலைமை தொடர்பில் தானே முதலில் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறான எதிர்க்கட்சித் தலைவர் எமது நாட்டில் இருப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது. உலக காலநிலை மாற்றங்கள் தொடர்பில் முன்னரே கூறக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் இருப்பது நாட்டுக்கு பெரும் சொத்தாகும். அவரின் உதவிகளை இலங்கைக்கு மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் பெற்றுக்கொடுக்க தயார்.
எமது அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களில் இது தொடர்பில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மேலதிகமான எதிர்க்கட்சித் தலைவரும் அது தொடர்பில் அவதானம் செலுத்துவது நாட்டுக்கு வளமாகும் என்றார்.

