எதற்கும் முகம்கொடுக்கத் தயாராகியே நான் யுத்தம் செய்யத் தீர்மானித்தேன்; முன்னாள் ஜனாதிபதி மகிந்த

எதற்கும் முகம்கொடுக்கத் தயாராகியே நான் யுத்தம் செய்யத் தீர்மானித்தேன்; முன்னாள் ஜனாதிபதி மகிந்த

நிந்தனைகளும் அவதூறுகளும் எனக்கு நன்றாகப் பழகிப்போனவை. அரசியல் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் என் மீது விரல்கள் நீட்டப்படும் என்பதை நான் நன்றாகவே அறிந்திருந்தேன். இவற்றுக்கெல்லாம் முகம்கொடுக்க தயாராகியே நான் யுத்தத்தை தொடர தீர்மானித்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், அது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மகிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எல்லாவற்றிற்கும் தயாராகியே நான் யுத்தம் செய்யத் தீர்மானித்தேன். அரசியல் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் என் மீது விரல்கள் நீட்டப்படும் என்பதை நான் நன்றாகவே அறிந்திருந்தேன். எனது உயிரையே இழக்க நேரிடலாம் என்பதையும் நான் உணர்ந்திருந்தேன். அது எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. நிந்தனைகளும் அவதூறுகளும் மகிந்தவுக்கு நன்றாகப் பழகிப்போனவை.

ஆனால், நீங்கள் தெளிவாக நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் உள்ளது. நாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை என்பதே அதுவாகும். நாம் பயங்கரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் செய்தோம். யார் எப்படிச் சொன்னாலும், நாம் உங்களை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றினோம். நம்மால் அதிகளவில் காப்பாற்றப்பட்டவர்கள் தமிழ் மக்களே ஆவர்.

முல்லைத்தீவு நந்திக்கடல் நதிக்கரைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகள் முடக்கப்பட்டிருந்த போது, அவர்கள் அந்தத் தமிழ் மக்களை ஒரு மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர். அவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றியவர்கள் எனது இராணுவ வீரர்களே ஆவர். பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் காப்பாற்றிய, உலகின் மிகப்பெரிய மனிதநேயப் போராட்டத்தை நடத்தியது எனது வீரமிக்க இராணுவமே ஆகும்.

யுத்தத்தின் இறுதி சில மணித்தியாலங்களில் கூட, பயங்கரவாதிகளின் கனரக ஆயுதத் தாக்குதல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றியது எமது வீரமிக்க இராணுவமே ஆகும். உங்களது குழந்தையைத் தனது இரு கைகளாலும் தூக்கியவர்கள் எனது இராணுவத்தினரே ஆவர். உங்களது மனதில் இருந்த பயத்தையும், காயங்களினால் ஏற்பட்ட உடல் வலியையும், பசியையும் போக்கியது மனிதநேயத்தை மனதில் தாங்கிய எமது நாட்டின் மனிதாபிமான இராணுவமே ஆகும்.

அந்த நாளே எனது வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்த நாளாகும். எனக்கு அந்த நினைவும் மகிழ்ச்சியும் மட்டுமே போதுமானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )