யுத்த நிறுத்தத்துக்கு மிகத் தீவிரமாக முயலும் அமெரிக்க துணை ஜனாதிபதி; இன்று மிகப் பெரும் தாக்குதலென ட்ரம்ப் எச்சரிக்கை

யுத்த நிறுத்தத்துக்கு மிகத் தீவிரமாக முயலும் அமெரிக்க துணை ஜனாதிபதி; இன்று மிகப் பெரும் தாக்குதலென ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் மீது இன்று செவ்வாய்க்கிழமை கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் ஒரு அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க அவசர கால நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் உருவான இந்தத் திட்டம், உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யவும், அடுத்த 15 முதல் 20 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளைத் தொடரவும் அழைப்பு விடுக்கிறது.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் (ET) ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வராவிட்டால், அந்நாட்டின் சிவிலியன் உள்கட்டமைப்புகள் உட்பட அனைத்தையும் ‘தகர்த்துவிடப் போவதாக’ ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இருப்பினும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், இது ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வாய்ப்பில்லை என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், வேன்ஸ் மற்றும் ட்ரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருடன் இணைந்து இந்தப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்தார். ஈரானின் சார்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி பங்கேற்றார்.

ட்ரம்ப்பின் காலக்கெடு காரணமாக சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100-க்கு மேல் நீடிக்கிறது. அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கலனுக்கு சுமார் $4.10 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை ஈரான் வெளியுறவு அமைச்சகம் நேற்று திங்களன்று கூறுகையில், தங்களது நலன்களின் அடிப்படைக் கோரிக்கைகளைத் தயாரித்து இடைத்தரகர்கள் மூலம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதே சமயம், ஈரானிய அதிகாரி ஒருவர் பேசுகையில், “போர்க்குற்றங்கள் இழைப்போம் என்ற மிரட்டல்களுக்கும், இறுதி எச்சரிக்கைகளுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது” என்றார்.

மேலும், ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )