அடுத்த தேர்தலில் நாமலே ஜனாதிபதி; சஜித்துக்கு 2ஆம் இடமே கிடைக்கும்

அடுத்த தேர்தலில் நாமலே ஜனாதிபதி; சஜித்துக்கு 2ஆம் இடமே கிடைக்கும்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ முதலிடத்தைப் பெற்று வெற்றிபெறுவார் எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இரண்டாம் இடமே கிடைக்கும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குண்டசாலை தொகுதி அமைப்பாளர் ரிஷாட் மஹ்ரூப் ஏற்பாடு செய்திருந்த கட்சி அலுவலகத் திறப்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் சார்பில் 2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடுவார். எனினும், தற்போதைய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக சிலவேளைகளில் ஜனாதிபதித் தேர்தல் அதற்கு முன்னதாகவே நடத்தப்படவும் வாய்ப்புள்ளது.

தற்போது பொதுஜன பெரமுனவுடன் பெருமளவிலான கட்சிகள் கைகோர்த்துள்ளன. மேலும் பல கட்சிகள் எம்முடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளன. நாமல் ராஜபக்ஷ ஒரு கூட்டணியின் கீழ் போட்டியிடுவதா அல்லது பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து இக்கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

கூட்டுறவுத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதால் சிறந்த பெறுபேறுகள் கிடைத்து வருகின்றன. இதன் விளைவாக அரசாங்கம் கூட்டுறவுத் தேர்தல்களில் தோல்வியடைந்து வருகின்றது.

கடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்தவர்களில் 95 சதவீதமானோரும், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களில் 80 சதவீதமானோரும் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர்.

கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்த வாக்குகளில் பெரும்பாலானவை எமது கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களுடையதாகும். கிராம மட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களாகச் செயற்பட்டவர்கள் பெரும்பாலும் எமது கட்சியின் முன்னாள் அமைப்பாளர்களே.

உதாரணமாக, அண்மையில் வெலிகம பிரதேச சபைத் தலைவராகப் பதவியேற்றவர் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் முன்னாள் செயலாளராவார்.இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவுடன் சென்றவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை மீண்டும் எம்முடன் இணைந்து வருகின்றனர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான்கு அல்லது ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், நாமல் ராஜபக்ஷ முதலிடத்தையும் சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தையும் பெறுவது உறுதியாகும் எனத் தெரிவித்தார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )