
நுகேகொடையில் அரச எதிர்ப்புப் போராட்டம்: நாடெங்கிலும் இருந்து SLPP ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்பு ! பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!
அரசாங்கத்திற்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் சில ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘மஹஜன ஹண்ட’ (மக்கள் குரல்) பொதுக்கூட்டம் (21) நுகேகொடை, ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் ஆரம்பமானது.
நேற்று காலை முதலே அரசியல் பிரதிநிதிகள் அங்கு சென்று மேடை ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்.
இப்போது பெருமளவான மக்கள் மத்தியில் உரைகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும், இந்த அரசாங்க எதிர்ப்புப் பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB), திலித் ஜயவீரவின் சர்வஜன பலய மற்றும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி (NFF) ஆகிய கட்சிகள் பங்கேற்கப்போவதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. பிரதான கட்சிகளின் இந்த புறக்கணிப்பானது, எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின்மையை வெளிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பங்குபற்றியுள்ளனர்.
இதேவேளை, கூட்டத்தில் கலந்துகொள்ளும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நுகேகொடைப் பகுதியில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

