மட்டக்களப்பில் பௌத்த வழிபாட்டுத் தளம் அமைக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீநேசன் கருத்து !

மட்டக்களப்பில் பௌத்த வழிபாட்டுத் தளம் அமைக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீநேசன் கருத்து !

மட்டக்களப்பு நெடிய கல்மலையில் பௌத்தர்கள் ஒரு வழிபாட்டுத் தலத்தை அமைக்கின்றார்கள். பொலன்னறுவையில் இருந்து பிக்குகள் வருகின்றார்கள். வழிபாட்டு இடங்களை அமைத்து தேசிய நல்லிணக்கத்திற்கு முரண்பாடான செயலை செய்து கொண்டிருக்கின்றார்கள். குருந்தூர் மலையில் பௌத்த இடிபாடுகளை கொண்டு சென்று கொட்டிவிட்டே உரிமை கோரப்படுவதாக மிகிந்தலை விகாராதிபதி குறிப்பிட்டுள்ளமை முறையற்றது. இவ்வாறான கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பல சிறந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கிரான் பாலம், பொண்டுகள் சேனை பாலம், முந்தணையாறு நீர்த்தேக்கம் திட்டங்களை தொடங்குவதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு அடிப்படித் தேவையாக உள்ள குடிநீர் கிட்டத்தட்ட 65 வீதமான மக்களுக்குத்தான் கிடைத்துள்ளதாக கூறுகின்றார்கள். ஆகவே சுத்தமான குடிநீர் விடயத்தில் காலத்தை தாமதிக்கக் கூடாது. மக்கள் அசுத்தமான நீரை அருந்துவதனால் அவர்கள் சிறுநீரக நோயாளிகளாக மாறுகின்றனர். எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள குக்கிராமங்களில் சுத்தமான குடிநீர் வழங்க நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. முதலில் கிராமங்களுக்குள் புகுந்த யானைகள் தற்போது நகரங்களுக்குள்ளும் நுழைகின்றன. இங்கு கிட்டத்தட்ட 8 வனவள அலுவலகங்கள் இருக்க வேண்டும். பணியாட்கள் கிட்டத்தட்ட 75 பேர் வரை தேவைப்படுகின்றது.

ஆனால் 35 பணியாளர்களே தற்போதுள்ளனர். இவ்வாறான பற்றாக்குறையால்தான் யானைகளினால் மக்களின் உடமைகளும் உயிர்களும் நாசமாக்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டிலிருந்து 2025 தற்போது வரை மட்டக்களப்பில் யானைகளின் தாக்குதலினால் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 89 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. முதலைகளினால் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

அடுத்தது மேய்ச்சல் தரைப் பிரச்சினை. மயிலத்தமடு, மாதவனையாக இருக்கலாம், கருவாச்சோலையாக இருக்கலாம். இந்த இடங்களில் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை வைத்துக்கொண்டு பராமரிக்க முடியாத வகையில் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. பல நிலங்களை புற நிலங்கள் என்றும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குரிய நிலம் என்றும் தொல்லியல் நிலம் என்றும் பலவிதமாக அடையாளம் இடப்படுவதனால் கால்நடைகளை வளர்க்க முடியாமல் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

அண்மையில் அமைச்சர் சந்திரசேகர் மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிப்பது தொடர்பில் கூறியிருந்தார். அவர் கூறியது போன்று நடைபெற வேண்டும். த பினான்ஸ் என்ற நிதி நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளதால் அதில் முதலீடு செய்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

ஓய்வூதியர்களின் ஓய்வுப்படி முரண்பாடு நீக்கப்பட வேண்டும். 2021ஆம் ஆண்டு மார்கழி 31ஆம் திகதி ஓய்வு பெற்றவர்கள் 67500 ரூபா சம்பளம் ஒதுக்கப்படுகின்றது. அடுத்த நாள் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி ஓய்வு பெற்றவர்களுக்கு 97500 ரூபா ஒதுக்கப்படுகிறது. 1 நாள் பிந்தியவர்களுக்கு 30000 ரூபா வித்தியாசம் உள்ளது. இது பாரிய முரண்பாடு.

நெடியகல்மலை வடமுனையில் காணப்படுகின்றது. மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளது. அந்த இடத்தில் உண்மையில் ஒரு பௌத்த குடிமகன் கூட வாழவில்லை. கிட்டத்தட்ட 15 கிலோ மீற்றர் கடந்து வந்த அந்த நெடிய கல்மலையில் அவர்கள் ஒரு வழிபாட்டுத்தலத்தை அமைக்கின்றார்கள். பொலன்னறுவையிலிருந்து பிக்குகள் வருகின்றார்கள். வழிபாட்டு இடங்களை அமைத்து தேசிய நல்லிணக்கத்திற்கு முரண்பாடான செயலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

குருந்தூர் மலையில் பௌத்த இடிபாடுகளை கொண்டுசென்று கொட்டிவிட்டே உரிமை கோரப்படுவதாக மிகிந்தலை விகாராதிபதி கூறியிருந்ததை இங்கு குறிப்பிடுகின்றேன். எனவே இந்த விடயங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )