
வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் வானத்திலிருந்து குதிப்பார்!
2013 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக வானத்திலிருந்து குதித்துத் தான் ஒருவர் போட்டியிட்டவர். அதேபோன்று எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுவதற்காக ஒருவர் வானத்திலிருந்து குதித்து வரக் கூடுமெனத் தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான நீதியரசர். க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகத் திறப்பு விழா நேற்றுத் திங்கட்கிழமை இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு நிறைவுபெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடம் நடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தேசியமக்கள் சக்தியினருக்கு வாக்குவீதம் குறைவடைந்துள்ள நிலையில் மாகாண சபைத் தேர்தலில் வாக்குவீதம் இன்னும் குறையக்கூடும் என்பதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்தும் பிற்போட்டு வருகிறது.
மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் சூழ்நிலை உருவானால் தற்போது நாங்கள் வைத்துள்ள கூட்டுத் தொடர்ந்துமிருக்கும். அதேவேளை எங்கள் கட்சி எங்களை மேலும் பலப்படுத்துவதும் முக்கியமானது.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் தற்போது சுமுகமானதொரு நிலைமை காணப்படுவதாகத் தெரிந்தாலும் சிறிது காலத்தின் பின்னர் கட்சியின் இரண்டு பிரிவினர் மத்தியில் எவ்வாறான பிரச்சினைகள் உருவாகக் கூடும்? என்பது எமக்குத் தெரியாது. இவ்வாறு அவர்களுக்குள் பிரச்சினைகள் உருவாகும் போது நாமும் அவர்களுடன் சேர்ந்திருந்தால் அதனால் சில விளைவுகள் ஏற்படக் கூடும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தற்போது நாம் வைத்துள்ள கூட்டுத் தொடர்ந்தும் நீடிக்கும். எனினும், எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால் தான் எங்கள் கட்சியை நாங்கள் பலப்படுத்த வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

