
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் கோட்டைக்குள் நுழைந்த அமெரிக்கர்கள்
இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை சர்வதேசத் துறைமுகத்துக்கு அமெரிக்கத் தூதரகத்தின் உயர்மட்டக் குழுவினர் அண்மையில் விஜயம் செய்தமை இராஜதந்திர வட்டாரங்களில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த துறைமுகம் தற்போது சீன அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தால் 99 வருட கால குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஜேன் ஹவல் தலைமையில், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழுவின் விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.
எவ்வாறாயினும், மரியாதையின் நிமித்தமாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் அந்தத் துறைமுகத்துக்கு விஜயம் செய்ததாக குறிப்பிடப்படுகிறது.
இந்த விஜயத்தின்போது, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முனையங்கள் மற்றும் 41 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கிரேன் விரிவாக்கம் உள்ளிட்ட சமீபத்திய மேம்பாடுகள் குறித்து இதன்போது அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை (பெல்ட் அன்ட் ரோட்) முன்முயற்சியின் கீழ் துறைமுகம் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருப்பது, அதன் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலப் பயன்பாடு குறித்து அமெரிக்கா தொடர்ச்சியான ஆர்வத்தைக் காட்டுவதற்குக் காரணமாகிறது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

